போலி போலீஸ் உதவி கமிஷனர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்


போலி போலீஸ் உதவி கமிஷனர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 4 Aug 2021 10:16 PM IST (Updated: 4 Aug 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

கேரள போலீஸ் நிலையத்தை புகைப்படம் எடுத்ததால், போலி போலீஸ் உதவி கமிஷனர் சிக்கிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பட்டிவீரன்பட்டி:
கேரள போலீஸ் நிலையத்தை புகைப்படம் எடுத்ததால், போலி போலீஸ் உதவி கமிஷனர் சிக்கிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
போலி போலீஸ் அதிகாரி
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடியில், கடந்த 2-ந்தேதி போலீசார் நடத்திய வாகன சோதனையில் போலி போலீஸ் உதவி கமிஷனர் விஜயன் (வயது 46) சிக்கினார்.
சென்னை கொளத்தூரை சேர்ந்த அவர் பி.ஏ. (ஆங்கிலம்) பட்டதாரி ஆவார். அவரிடம் இருந்து ‘சைரன்' பொருத்திய ஜீப், சீருடை, போலி அடையாள அட்டை, துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 
லாரி உரிமையாளரான விஜயன், தனது மனைவியை ஏமாற்றுவதற்காக போலி உதவி கமிஷனர் போல வலம் வந்தது பட்டிவீரன்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமானது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயனை கைது செய்தனர். பின்னர் அவர், நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் சிறையில் அடைக்கப்பட்டார்.
கேரளாவுக்கு பயணம்
இந்தநிலையில் கைதான விஜயன், போலீசாரிடம் சிக்கியது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:- 
கைது செய்யப்பட்ட விஜயனுக்கு, சிறு வயது முதலே போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக அவர், குரூப்-1 தேர்வு எழுதினார். ஆனால் விஜயன் தோல்வி அடைந்து விட்டார்.
அதன்பிறகு அவர், தன்னை போலீஸ் அதிகாரி என கூறிக்கொண்டு பல்வேறு இடங்களில் வலம் வந்திருக்கிறார். குறிப்பாக சென்னையில் ‘சைரன்' பொருத்திய ஜீப்பில் பலநாட்கள் உலா வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனைக்கு தேனி மாவட்டம் வழியாக ஜீப்பில் புறப்பட்டார். தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளி சோதனை சாவடியில் போலீசார் அவரை தடுத்தனர்.
வழக்கு விசாரணைக்காக...
அப்போது, தான் தமிழகத்தில் போலீஸ் உதவி கமிஷனராக பணிபுரிவதாகவும், வழக்கு விசாரணை தொடர்பாக செல்வதாகவும் கூறி கேரளாவுக்குள் நுழைந்தார். பின்னர் அங்கிருந்து கட்டப்பனைக்கு ஜீப்பில் சென்ற அவர், போலீஸ் துணை சூப்பிரண்டு நிஷாந்த் என்பவரை சந்தித்தார்.
தனது அடையாள அட்டையை அவர் காண்பித்து, தன்னை உதவி போலீஸ் கமிஷனர் என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் சிறிதுநேரம் பேசி கொண்டிருந்தனர். 
அதன்பிறகு விஜயன், அங்கிருந்து தமிழகத்துக்கு ஜீப்பில் புறப்பட தயாரானார். அதற்கு முன்னதாக, கட்டப்பனை போலீஸ் நிலையத்தை அவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
தமிழக போலீசாருக்கு தகவல்
விஜயனின் இந்த நடவடிக்கைகளை கவனித்த கட்டப்பனை போலீசார், அவர் மீது சந்தேகம் அடைந்தனர். இதனால் விஜயனுக்கு தெரியாமல் அவரையும், அவர் வந்த காரையும் கட்டப்பனை போலீசார் புகைப்படம் எடுத்தனர். மேலும் அவருடைய அடையாள அட்டையில் இருந்த எண்ணையும் குறித்து கொண்டனர்.
இதனையடுத்து விஜயனின் புகைப்படம், ஜீப் எண், அடையாள அட்டை எண் ஆகியவற்றை தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி கேரள போலீசார் விவரங்களை கேட்டனர்.
அப்போது, விஜயன் தமிழக போலீஸ் துறையில் பணிபுரியவில்லை என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து விஜயன், போலி போலீஸ் அதிகாரி என்று தெரியவந்தது. இதனால் அவரை பிடிக்க கட்டப்பனை போலீசார் விரைந்தனர்.
 ஜீப்பில் தப்பி...
 கட்டப்பனையில் இருந்து தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டு வரை சோதனை சாவடிகளில் உள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் அதற்குள் விஜயன் ஜீப்பில் தப்பி, தேனி மாவட்டத்துக்குள் நுழைந்து விட்டார். இதைத்தொடர்ந்து தமிழக போலீசாருக்கு, கேரள போலீசார் தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகளில் பணியாற்றும் போலீசார் மற்றும் ரோந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்தநிலையில் தான் பட்டிவீரன்பட்டி அருகே நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் விஜயன் சிக்கியுள்ளார். 
மேலும் விஜயனுக்கு உயர் போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிடுக்கிப்பிடி விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். இதைத்தவிர போலீஸ் உதவி கமிஷனர் என்று கூறி பண மோசடியில் அவர் ஈடுபட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் உடையில் விதவிதமான ‘கெட்டப்’
கைதான விஜயன் தனது முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் போலீஸ் உடையில் விதவிதமான ‘கெட்டப்’பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 
மேலும் பிரபலமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பெடி மற்றும் சில உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 


Next Story