விநாயகர் சிலை தயாரிப்பு பணி முடங்கியது


விநாயகர் சிலை தயாரிப்பு பணி முடங்கியது
x
தினத்தந்தி 8 Aug 2021 11:22 PM IST (Updated: 8 Aug 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி முடங்கியது. இதனால் இத்தொழிலையே நம்பியுள்ள 5 ஆயிரம் கைவினை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம், 

இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள், கோவில்களில் 5 அடி உயரம் முதல் 15 அடி உயரம் வரையுள்ள பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். பின்னர் விழா முடிந்ததும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்காக ஆண்டுதோறும் விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு, ராகவன்பேட்டை, சாலைஅகரம், கோலியனூர், பனையபுரம், அரசூர்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

வாழ்வாதாரம் பாதிப்பு

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கோவில்களிலும், பொது இடங்களிலும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அரசு தடை விதித்ததால் பொதுமக்கள் வீடுகளிலேயே சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபட்டனர். அரசின் இந்த உத்தரவினால் ஏற்கனவே லட்சக்கணக்கில் முதலீடு செய்து பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை தயாரித்து வைத்திருந்த கைவினை தொழிலாளர்கள் அந்த சிலைகளை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாமல் தவித்தனர்.

அரசு அனுமதி வழங்குமா?

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல்  படிப்படியாக குறையத்தொடங்கியதையடுத்து  இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பெரிய அளவிலான சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கையுடன் கைவினை தொழிலாளர்கள் உள்ளனர்.
இதனிடையே தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருவதால் கோவில்களில் திருவிழா நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்றும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பெரிய அளவிலான சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதி வழங்குமா? என்பதில் சந்தேகம் உள்ளது. இதுவரை அதுபற்றி அரசிடம் இருந்து எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை.

சிலைகள் தயாரிப்பு பணி முடங்கியது

இதன் காரணமாக கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் விநாயகர் சிலை தயாரிப்பு பணி முற்றிலும் முடங்கியது. இதனால் சிலைகள் தயாரிக்கும் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே தயாரித்துள்ள விநாயகர் சிலைகளை வாங்கிச்செல்வதற்கும், புதிதாக சிலைகளை தயார் செய்யவும் இதுவரை யாரும் ஆர்டர் கொடுக்காததால் விநாயகர் சிலை தயாரிப்பு பணியை தொடர்ந்து மேற்கொள்ளாமல் அதன் தொழிலாளர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்., தொழிலுக்காக செய்துள்ள முதலீட்டில் ஒரு சிறு தொகையாவது கிடைக்குமா? என்று விழிபிதுங்கி நிற்கின்றனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காதபட்சத்தில் வீடுகளில் சிலை வைத்து எளிமையாக கொண்டாடுவதை நம்பி அன்றாட வயிற்றுப்பிழைப்புக்காகவும், தங்களது தொழிலுக்காக வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் தற்போது சிறு, சிறு விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story