காரில் துப்பாக்கியுடன் வந்த 6 பேர் கைது


காரில் துப்பாக்கியுடன் வந்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 9 Aug 2021 9:21 PM IST (Updated: 9 Aug 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே நடந்த வாகன சோதனையில் காரில் துப்பாக்கியுடன் வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பழனி : 

வாகன சோதனை
பழனி முருகன் கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினமும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அதேபோல் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து பழனி வழியே கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். 


இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி பழனி அருகே தொப்பம்பட்டி சோதனை சாவடியில் கீரனூர் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

நாட்டுத்துப்பாக்கி
அதன்படி நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாராபுரத்தில் இருந்து பழனி நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. இதையடுத்து தொப்பம்பட்டி சோதனை சாவடியில் இருந்த போலீசார் காரை மறித்து, அதில் வந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வந்த காரை சோதனை செய்தனர். அப்போது காருக்குள் நாட்டுத்துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்து, சிறிய இரும்பு குண்டுகள் இருந்தன.

6 பேர் கைது 
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், காரில் வந்தவர்களிடம் துருவி துருவி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள முண்டியூரை சேர்ந்த முருகன் (வயது 39), ஏழுமலை (30), ராமச்சந்திரன் (39), சீனிவாசன் (60) மற்றும் நடுமதூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (40), சத்யராஜ் (30) என்பது தெரியவந்தது. 

இதையடுத்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன் உள்பட 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்கள் எதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து நாட்டுத்துப்பாக்கியுடன் பழனி பகுதிக்கு வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story