கொரோனா 3-வது அலையால் கோவைக்கு அதிக பாதிப்பா?


கொரோனா 3-வது அலையால் கோவைக்கு அதிக பாதிப்பா?
x
தினத்தந்தி 10 Aug 2021 7:47 AM IST (Updated: 10 Aug 2021 8:11 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 3-வது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்று தமிழக அரசின் முதன்மை செயலாளர் சித்திக் பேட்டி அளித்தார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் முதன்மை செயலாளருமான சித்திக் தலைமை தாங்கினார்.

 இதில் ஊராட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு, தொழில்துறையினர் கலந்து கொண்டனர் பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதன்மை செயலாளர் சித்திக் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 200 புதிய நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவையில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருக்கிறது. இதனால் கோவையில் 3-வது அலையால் அதிகளவு பாதிப்புக்கு வாய்ப்பு உள்ளது. இதை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் இருக்கிறது. தேவைப்பட்டால் ஒரு வாரத்தில் படுக்கைகளை உயர்த்தி கொள்ள முடியும். ஒரே சமயத்தில் எல்லா மாவட்டங்களிலும் பாதிப்பு வர வாய்ப்பு குறைவு.

ஆக்ஸிஜன் டேங்க் ஒன்று சென்னையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு மாற்றப்படுகின்றது. கோவையில் ஆக்சிஜன் தயாரிப்புகள் இருப்பதால், நிறைய உயிர் சேதம் இல்லாமல் 3-வது அலையை நம்மால் எதிர் கொள்ள முடியும். அடுத்த 2 மாதங்களுக்கு மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த முறை குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தால் அதை எதிர் கொள்ள குழந்தைகள் நல டாக்டர்கள் தயாராக உள்ளனர். இதற்காக அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு 124 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 82 ஐ.சி.யு படுக்கைகளும் தயாராக இருக்கிறது.

 இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கை 40-ம், ஐ.சி.யு படுக்கைகள் 30-ம் குழந்தைகளுக்கு தயாராக இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, வணிகவரித்துறை இணை ஆணையாளர் மெர்சி ரம்யா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் பலர் இருந்தனர்.

முன்னதாக தமிழக முதன்மை செயலாளர் சித்திக் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். 

Next Story