மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற தொழிலாளி கைது


மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 12 Aug 2021 11:19 PM IST (Updated: 12 Aug 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

இரணியல் அருகே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

திங்கள்சந்தை:
இரணியல் அருகே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.
கள்ளக்காதல்
குமரி மாவட்டம் கீழமுட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜான்பால் (வயது 35), மீனவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மேல மணக்குடியை சேர்ந்தவர் சூசை மிக்கேல், மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி ஜெனி (33). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
 ஜான்பாலுக்கும், சூசைமிக்கேல் மனைவி ஜெனிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த சூசைமிக்கேல் இருவரையும் கண்டித்தார். ஆனாலும், கள்ளக்காதலனை மறக்க முடியாததால் ஜெனி கடந்த 2 மாதங்களுக்கு முன் கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் கள்ளக்காதலன் ஜான்பாலுடன் ஓட்டம் பிடித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த சூசைமிக்கேல் மனைவி, குழந்தைகளை தேடி வந்தார். 
வெட்டிக்கொலை 
இந்தநிலையில், அவர்கள் தலக்குளம் உடையார்பள்ளத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த போது சூசை மிக்கேல் அங்கு சென்று ஜான்பாலை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றார். தடுக்க வந்த ஜெனிக்கும் வெட்டு விழுந்தது. 
இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ேமலும், இரணியல் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், சூசை மிக்கேலை வலைவீசி தேடி வந்தனர். 
இந்தநிலையில் சூசைமிக்கேல் தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.  தனிப்படையினர் விரைந்து சென்று சூசைமிக் ேகலை கைது செய்து இரணியலுக்கு கொண்டு வந்தனர். 
வாக்குமூலம்
தொடர்ந்து, சூசைமிக்கேல் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
எனது குடும்ப வாழ்க்கையை நாசமாக்கிய ஜான்பாலை தீர்த்துக்கட்ட சம்பவத்தன்று இரவு அரிவாளை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் உடையார்பள்ளத்தில் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றேன்.
 அப்போது, அங்கு ஜான்பாலும் எனது மனைவி ஜெனியும் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இதைகண்ட எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 
உடனே, நான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜான்பாலை வெட்டினேன். அவரது வலது கையில் வெட்டு விழுந்தது. உடனே, ஜான்பால் வீட்டின் மாடிக்கு செல்ல முயன்றார். மாடி கதவு பூட்டி இருந்தது. அப்போது, அவரது முதுகில் வெட்டினேன். இதை தடுக்க வந்த என் மனைவி ஓடி வந்தார். அதனால், அவருடைய விலாவில் வெட்டினேன்.
விரட்டி வெட்டினேன்
 இதற்கிைடயே ஜான்பால் அங்கிருந்து தப்பி தெருவில் ஓடினார். ஆனாலும், நான் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினேன். இதில் நிலைகுலைந்து விழுந்த ஜான்பால் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து நான் தப்பிச் சென்றேன். தூத்துக்குடியில் பதுங்கி இருந்தபோது போலீசார் என்னை மடக்கி பிடித்தனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story