பயிற்சி போலீஸ்காரர்களிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

மைசூருவில் பயிற்சி போலீஸ்காரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து மாநில போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டு உள்ளார்.
மைசூரு: மைசூருவில் பயிற்சி போலீஸ்காரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து மாநில போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டு உள்ளார்.
போலீஸ்காரர்களிடம் லஞ்சம்
மைசூருவில் போலீஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போலீஸ் பணிக்கு தேர்வாகும் போலீஸ்காரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் 8 குழுவினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி மையத்தின் இன்ஸ்பெக்டராக சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றினார். இந்த நிலையில் பயிற்சி பெற்று வரும் போலீஸ்காரர்களிடம், பயிற்சி அளிக்க சுப்பிரமணியன் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
அதாவது போலீஸ்காரர்களிடம் இருந்து தலா ரூ.2,500 வரை அவர் லஞ்சம் பெற்றதாக தெரிகிறது. இதுபற்றி மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டுக்கு தகவல் கிடைத்தது.
பணி இடைநீக்கம்
இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி அவர் மைசூரு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சுப்பிரமணியன், பயிற்சி போலீஸ்காரர்களிடம் இருந்து பயிற்சி அளிக்க தலா ரூ.2,500 லஞ்சம் வாங்கியதும், அதன்மூலம் அவர் ரூ.80 லட்சம் வரை சேர்த்ததும் தெரிந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள், டி.ஜி.பி. பிரவீன் சூட்டுக்கு அறிக்கை தகாக்கல் செய்தனர். இதையடுத்து சுப்பிரமணியனை பணி இடைநீக்கம் செய்து பிரவீன் சூட் உத்தரவிட்டு உள்ளார்.
பயிற்சி போலீஸ்காரர்களிடம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் மைசூரு போலீஸ்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story