தர்மபுரி அருகே 3-வதாக பிறந்த பெண் சிசு எருக்கம்பால் ஊற்றி கொலை பாட்டி கைது

தர்மபுரி அருகே 3-வதாக பிறந்த பெண் சிசுவை எருக்கம்பால் ஊற்றி கொலை செய்த பாட்டியை தர்மபுரி போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது.
தர்மபுரி,
தர்மபுரி அருகே உள்ள பெரியேரி மோட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 31), விவசாயி. இவருடைய மனைவி தேன்மொழி (27). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே மீண்டும் கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தேன்மொழி முத்து கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று குழந்தையுடன் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அந்த பெண் சிசு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென இறந்தது. பாம்பு கடித்ததால் பெண் சிசு இறந்ததாக கூறி குடும்பத்தினர் சிசுவை மோட்டுப்பட்டிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் 3- வதாக பிறந்த பெண் சிசு திடீரென இறந்த சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், அரசு டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் நேற்று மோட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று அடக்கம் செய்யப்பட்ட பெண் சிசுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தினார்கள்.
இதுதொடர்பாக போலீசார் தேன்மொழியின் தாயார் உமா (48) என்பவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பெண் சிசுவுக்கு எருக்கம்பாலை ஊற்றி கொன்றதை அவர் ஒப்பு கொண்டார். இதையடுத்து உமாவை நேற்று தர்மபுரி போலீசார் கைது செய்தனர். 3-வதாக பிறந்த பெண் சிசுவை பாட்டியே எருக்கம்பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story