வால்பாறையில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்


வால்பாறையில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 17 Aug 2021 10:53 PM IST (Updated: 17 Aug 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

தேயிலை தோட்டங்களுக்குள் வீசி எறியும் மதுபாட்டில்களால் வால்பாறையில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு பொது மக்களிடம் உள்ளது.

வால்பாறை

தேயிலை தோட்டங்களுக்குள் வீசி எறியும் மதுபாட்டில்களால் வால்பாறையில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு பொது மக்களிடம் உள்ளது.

சுற்றுலா பயணிகள்

மலைப்பிரதேசமான வால்பாறை சிறந்த சுற்றுலா மையமாக உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல் கிறார்கள். இவ்வாறு வருபவர்கள் மலைப்பாதையில் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்தி மது அருந்துவதுடன், பாட்டில்கள் மற்றும் உணவு கழிவுகளை தேயிலை தோட்டங்களுக்குள் வீசி விட்டு செல்கிறார்கள். 

இதனால் மதுபாட்டில்கள் தேயிலை தோட்டங்களுக்குள் உடைந்து கிடக்கிறது. அதுபோன்று பிளாஸ்டிக் பொருட்களும் அதிகளவில் குவிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது:-

பதம் பார்க்கும் பாட்டில்கள் 

கொரோனா பரவல் காரணமாக வால்பாறைக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது யாரும் வருவது இல்லை. 

ஆனால் அனுமதி இருந்த காலத்தில் வந்தபோது, வாட்டர்பால்ஸ் சாலையேரத்தில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் சென்று மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர். 

இதனால் சாலையோரத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்கள், காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக மதுபாட்டில்கள் உடைந்து கிடப்பதால், அங்கு வேலை செய்து வரும் தொழிலாளர்களின் கால்களை பதம் பார்க்கிறது. 

நடவடிக்கை இல்லை 

அதுபோன்று இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம். குறிப்பாக காட்டு யானைகள் அதிகம் உண்டு. இந்த உடைந்த மதுபாட்டில்கள் மற்றும் வீசி எறிந்த பிளாஸ்டிக் பொருட்களால் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

இதைத்தடுக்க போலீசார் மற்றும் வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. குறிப்பாக ஆழியாறு சோதனை சாவடியை சுற்றுலா பயணிகள் கடந்து வரும்போது அவர்களை முறையாக சோதனை செய்வது இல்லை. 

சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் 

இதன் காரணமாக சாலையோரத்தில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து விடப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை நீடித்தால், இயற்கை எழில் கொஞ்சம் அழகான வால்பாறை பகுதி சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு விடும். 

எனவே இதைத்தடுக்க சோதனை சாவடியிலேயே வனத்துறை யினர் கடும் சோதனை மேற்கொள்ள வேண்டும். அதுபோன்று அடிக்கடி வனத்துறை மற்றும் போலீசார் மலைப்பாதை மற்றும் பிற இடங்களில் ரோந்து செல்ல வேண்டும். 

கடும் நடவடிக்கை 

மேலும் தடையை மீறி தேயிலை தோட்டங்களுக்குள் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே வால்பாறையின் அழகை காப்பாற்ற முடியும். அதற்கு வனத்துறை, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story