காய்கறிகள் விலை உயர்வு


காய்கறிகள் விலை உயர்வு
x
தினத்தந்தி 19 Aug 2021 6:49 AM IST (Updated: 19 Aug 2021 6:49 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ பீட்ரூட் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஊட்டி

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ பீட்ரூட் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைந்தது

மலைமாவட்டமான நீலகிரியில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பூண்டு, பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் அறுவடை செய்த காய்கறிகளை விவசாயிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளில் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு தினமும் 10 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. தற்போது தொடர் மழையால் சில பகுதிகளில் அறுவடைக்கு தயாரான காய்கறிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்து இருக்கிறது. 

விலை உயர்வு

இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது. ஆனால் பூண்டு அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால் விளைச்சல் அதிகரித்து இருப்பதோடு, அதன் விலை குறைந்து வருகிறது. 
இதுகுறித்து மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து 5 டன்னாக குறைந்ததால், விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ முள்ளங்கி ரூ.35 முதல் ரூ.40, கேரட் ரூ.50 முதல் ரூ.60, பீட்ரூட் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.30 முதல் ரூ.35, பீன்ஸ் ரூ.25 முதல் ரூ.30, பட்டாணி ரூ.180, அவரை ரூ.80, புரூக்கோலி ரூ.150, டர்னீப் மற்றும் நூல்கோல் ரூ.30 முதல் ரூ.35, முட்டைகோஸ் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ஓணம் பண்டிகை

பூண்டு விலை மிகவும் குறைந்து ரூ.80 முதல் ரூ.100 வரை மட்டும் விற்பனை ஆகிறது. விலை வீழ்ச்சிக்கு விளைச்சல் அதிகரித்து வரத்து அதிகமானதே காரணமாகும். சில்லறை விலையில் காய்கறி விலை மேலும் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கேரளாவில் ஓணம் பண்டிகை வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஓணம் பண்டிகையின்போது ஊட்டியில் இருந்து காய்கறிகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும். தற்போது கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவே சரக்கு வாகனங்களில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.


Next Story