சென்னை ஆழ்வார்பேட்டையில், நள்ளிரவில் கார்களை உடைக்கும் நிர்வாண சைக்கோ ஆசாமி

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் நிர்வாண கோலத்தில் திரியும் சைக்கோ ஆசாமி ஒருவர் கற்களை வீசி வீடுகளுக்குள் நிறுத்தி வைத்திருக்கும் கார்களை நள்ளிரவு நேரத்தில் உடைத்து வருகிறார்.
சைக்கோ ஆசாமி வெறியாட்டம்
சென்னையில் சேகர் போலீஸ் கமிஷனராக இருந்தபோது, சென்னை கே.கே.நகர் பகுதியில் சைக்கோ ஆசாமி ஒருவர், வீடுகளில் காவல் காக்கும் காவலாளிகளை குறி வைத்து தாக்கி கொலை செய்து வந்தார். தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து, உடலை பெட்ரோல் ஊற்றி அரைகுறையாக எரித்துவிடுவார்.கிட்டத்தட்ட 3 மாத காலம் கே.கே.நகர் பகுதியை கலக்கி வந்த அந்த சைக்கோ ஆசாமியை பிடிக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் களத்தில் இறங்கி கைது செய்தனர். நள்ளிரவில்தான் அந்த சைக்கோ ஆசாமியின் அட்டகாசம் காணப்பட்டது. 3 காவலாளிகளை கொலை செய்த அவர் போதைக்கு அடிமையானவர் என்று தெரிய வந்தது.அதே பாணியில் தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு நிர்வாண சைக்கோ ஆசாமி நள்ளிரவில் சுற்றி திரிகிறார். அவரை பகலில் காண முடியவில்லை. அவர் மனிதர்களை குறிவைக்காமல், வீடுகளில் நிறுத்தி வைத்திருக்கும் விலை உயர்ந்த கார்களை கற்களை வீசி தாக்கி உடைத்து வருகிறார்.
35 கார்கள் உடைப்பு
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அந்த நிர்வாண சைக்கோவின் அட்டகாசம் நீடித்து வருகிறது. இதுவரை அந்த பகுதியில் 35 விலை உயர்ந்த கார்களை உடைத்து நாசப்படுத்தி உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலை, ஜெ.ஜெ.தெரு, அம்புஜம்மாள் தெருவில் அந்த நிர்வாண சைக்கோவின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.அண்ணாமேம்பாலத்தின் கீழும், ஆழ்வார்பேட்டை பாலத்துக்கு கீழும் நள்ளிரவுக்குமேல் ஒருவர் நிர்வாண கோலத்தில் சுற்றித்திரியும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த கேமரா காட்சி தற்போது சமூகவலைதளங்களிலும் வைரலாகி உள்ளது. அதிகாலை 3 மணிக்கு பிறகு அவர் காணாமல் போய் விடுவதாக சொல்லப்படுகிறது. அவரை பிடிக்க முற்பட்ட பொதுமக்களையும் அவர் கற்களை வீசி தாக்குகிறார். அட்டகாசமாக சிரிக்கவும் செய்கிறார். இதனால் பொதுமக்கள் அவரை நெருங்க பயப்படுகிறார்கள்.
காங்கிரஸ் பிரமுகர்
அந்த பகுதியில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகர் சுமதி என்பவருக்கு சொந்தமான 2 கார்களை நிர்வாண சைக்கோ உடைத்துள்ளார். சுமதி தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ரோந்து போலீசார் சைக்கோ ஆசாமியை பிடிக்க துரத்தியபோதும் அவர்களால் பிடிக்க முடியவில்லை. உயர் போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு, இந்த நிர்வாண சைக்கோவை பிடிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு மற்றும் பீதி அந்த பகுதியை பற்றிக்கொண்டுள்ளது.
Related Tags :
Next Story