கர்நாடகத்தில் மத்திய மந்திரிக்கு தனி சட்டம் உள்ளதா?; டி.கே.சிவக்குமார் கேள்வி

துப்பாக்கியால் சுட்டு வரவேற்பு அளிக்கப்பட்ட விஷயத்தில் மத்திய மந்திரிக்கு தனி சட்டம் உள்ளதா? என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தொட்டபள்ளாபுராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சட்டசபை கூட்டத்தொடர்
முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தபோது, அழுதார். அவர் என்ன தவறு செய்தார். அவரை எதற்காக பா.ஜனதா மேலிடம் நீக்கியது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியதால் நீக்கப்பட்டார். இங்கும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தாததால் தான் எடியூரப்பா நீக்கப்பட்டதாக கருத வேண்டியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் நடத்தவில்லை. இது தவறானது. இந்த மழைக்கால கூட்டத்தொடரும் பெங்களூருவில் கூட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து கொள்ளவில்லை. பெலகாவி வெள்ள பாதிப்புக்கு இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வட கர்நாடகத்தை சேர்ந்தவர். பெலகாவியில் கூட்டத்தொடரை நடத்தினால், மக்கள் நிவாரணம் கேட்டு போராடுவார்கள் என்று பயந்து பெங்களூருவில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அபாயம் நீங்கவில்லை
மத்திய மந்திரி நிகழ்ச்சியில் பா.ஜனதாவினர் துப்பாக்கியால் வானத்தில் சுட்டு வரவேற்றுள்ளனர். அந்த துப்பாக்கிக்கு உரிமம் கொடுத்தது யார்?. அவர்களை இந்த அரசு கைது செய்யாமல் இருப்பது ஏன்?. மத்திய மந்திரிக்கு தனி சட்டம் உள்ளதா?. நடவடிக்கை எடுக்க பசவராஜ் பொம்மைக்கு தைரியம் உள்ளதா?. போலீஸ் மந்திரியால் நிலைமையை நிர்வகிக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும்.
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்தாலும், அதன் அபாயம் நம்மை விட்டு நீங்கவில்லை. அதனால் அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story