நெல் வயலில் களையெடுத்த மத்திய மந்திரி ஷோபா

உடுப்பி அருகே மக்கள் ஆசி யாத்திரை மேற்கொண்ட மத்திய மந்திரி ஷோபா நெல் வயலில் களையெடுத்தார். பின்னர் அவர் கூறுகையில், விவசாயத்தை காக்க நடவடிக்கை எடுப்பேன் என சூளுரைத்தார்.
உடுப்பி:
களையெடுத்த மத்திய மந்திரி
உடுப்பி-சிக்கமகளூரு தொகுதி எம்.பி.யான ஷேபா மத்திய வேளாண்மை துறை இணை மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் தனது தொகுதியில் மக்கள் ஆசி யாத்திரை தொடங்கினார். இந்த யாத்திரையின் போது அவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். மேலும் மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் யாத்திரையின் 2-வது நாளான நேற்றும் அவர் இந்த யாத்திரை மேற்கொண்டார். அப்போது உடுப்பி அருகே கடேகரு கிராமத்தில் உடுப்பி பா.ஜனதா எம்.எல்.ஏ. ரகுபதி பட் 3 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்து வரும் தோட்டத்தை மத்திய மந்திரி ஷோபா பார்வையிட்டார். பின்னர் அவர் தொழிலாளர்களுடன் சேர்ந்து நாற்றுகள் இடையே இருந்த களைகளை பிடுங்கி அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
விவசாயத்தை காக்க நடவடிக்கை
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் உத்தரவின் படி மக்கள் ஆசி யாத்திரை மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை விவசாயியின் மகளான எனக்கு பிரதமர் மத்திய மந்திரி பதவி வழங்கியுள்ளார். எனவே எனக்கு விவசாயிகள் பயிரை நட்டு சாகுபடி செய்து அதை அறுவடை செய்து விற்பனை செய்யும் வரை எவ்வளவு கஷ்டம்படுகிறார்கள் என்பது தெரியும்.
நான் விவசாயிகள் மற்றும் விவசாயத்தை காக்க அனைத்து உதவிகளையும், நடவடிக்கையும் செய்வேன். விவசாயத்தை நாட்டின் முதுகெலும்பாக மாற்ற கடினமாக உழைப்பேன். விவசாயம் மற்றும் விவசாயிகளை காக்கும் வகையில் நெல் சாகுபடி திட்டம் உடுப்பி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.. இது நல்ல திட்டம். இந்த திட்டத்தில் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story