திண்டுக்கல் ரெயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


திண்டுக்கல் ரெயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 21 Aug 2021 9:52 PM IST (Updated: 21 Aug 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ரெயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வடமதுரை:

வெடிகுண்டு மிரட்டல்

திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலைய வளாகத்தில், போலீஸ் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. நேற்று முன்தினம் இந்த கட்டுப்பாட்டு அறையில், அம்பாத்துறை போலீஸ் ஏட்டு மகேஸ்வரி பணியில் இருந்தார். அப்போது, கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்தது. 

எதிர்முனையில் பேசிய நபர், திண்டுக்கல் அரசு மருத்துவமனை, திண்டுக்கல் ெரயில் நிலையம் மற்றும் வடமதுரை அருகே ெரயில் தண்டவாளம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் குண்டு வெடிக்கும் என்றும் கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

இதன் எதிரொலியாக போலீசார் உஷார்படுத்தப்பட்டு திண்டுக்கல் ரெயில் நிலையம், அரசு மருத்துவமனை, வடமதுரை ரெயில்வே தண்டவாள பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் குறித்த விசாரணையில் போலீசார் இறங்கினர்.

 வாலிபர் கைது 

அப்போது மிரட்டல் விடுத்த நபர், வடமதுரை பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது. எனவே இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

மேலும் அந்த நபரை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், மர்ம நபரின் செல்போன் செயல்பாட்டை ஆய்வு செய்தனர். 

அப்போது மிரட்டல் விடுத்த நபர், திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு வந்த தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பழையூரை சேர்ந்த சந்திரசேகர் (வயது 32) என்று தெரியவந்தது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் உள்ள மனநல காப்பகத்தில் இருந்து வெளியே வந்த சந்திரசேகர், திண்டுக்கல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

இதற்கிடையே அவரை கைது செய்த போலீசார், மீண்டும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story