கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கோவை
கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் வாசலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஓணம் பண்டிகை
மக்களை காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி கேரள மாநிலத் தில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
அது போல் கேரள எல்லையை ஒட்டி உள்ள கோவையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மலையாள மக்கள் கொரோனா காரணமாக ஓணம் பண்டிகையை எளிய முறையில் கொண்டாடினார்கள்.
இதற்காக கோவை மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
சாமி தரிசனம்
ஓணத்தையொட்டி கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் நடை நேற்று காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோவிலில் 40 கிலோ பூக்களால் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டனர். மேலும் மலையாள மக்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து, சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலுக்கு வந்தனர்.
ஆனால் கொரோனாவால் வார இறுதி நாட்களில் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
எனவே அவர்கள் கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது அவர்கள், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்தனர்.
கலை நிகழ்ச்சிகள் ரத்து
டாடாபாத்தில் உள்ள கோவை மலையாளி சமாஜத்தில் ஓணம் பண்டிகையையொட்டி அத்தப்பூ கோலம் இடப்பட்டு இருந்தது.
கொரோனா காரணமாக அங்கு வழக்கமாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் கோவையில் வசிக்கும் கேரள மாநில மக்கள் வீடுகளிலேயே அத்தப்பூ கோலமிட்டு அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஓணம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
கொரோனா காரணமாக உறவினர்களை அழைத்து விருந்து படைக்க முடிய வில்லை என்று மலையாள மக்கள் தெரிவித்தனர். கொரோனாவால் ஓணம் பண்டிகை களைஇழந்தது.
Related Tags :
Next Story