குமரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கோவில்களுக்குள் அனுமதி இல்லாததால் பக்தர்கள் வெளியே நின்று வழிபட்டு சென்றனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கோவில்களுக்குள் அனுமதி இல்லாததால் பக்தர்கள் வெளியே நின்று வழிபட்டு சென்றனர்.
அத்தப்பூ கோலம்
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்றைய குமரி மாவட்டம், திருவாங்கூர்- கொச்சி சமஸ்தானத்துடன் இணைந்திருந்த காரணத்தாலும், மலையாள மொழி பேசும் மக்கள் குமரி மாவட்டத்தில் அதிகமாக இருப்பதாலும் ஓணம் பண்டிகை குமரி மாவட்டத்திலும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதிலும் குமரி மேற்கு மாவட்டப் பகுதியில் தீபாவளி பண்டிகை போன்று இந்த பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஆனால் கொரோனா பரவலின் காரணமாக பெரிய அளவில் இந்த பண்டிகை கொண்டாடப்படா விட்டாலும் அவரவர் வீடுகளில் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பண்டிகை எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டனர். மேலும் வீடுகளில் ஊஞ்சல் கட்டி சிறுவர் சிறுமிகள் ஆடி மகிழ்ந்தனர்.
சிறப்பு பூஜைகள்
ஓண பண்டிகையையொட்டி நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்கள் மற்றும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் சனிக்கிழமையான நேற்று கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் ஓணத்தையொட்டி காலையிலேயே ஆண்கள், பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக கோவில்களுக்கு வந்தனர். கோவிலுக்குள் அனுமதி இல்லாததால் அவர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமியை வழிபட்டுச் சென்றனர்.
ஓண விருந்து
ஓணத்தையொட்டி அவரவர் வீடுகளில் ஓண விருந்தும் சமைத்து குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் சேர்ந்து உண்டனர். மேலும் சிறுவர்களும், பெரியவர்களும் ஓண ஊஞ்சல் ஆடியும், நடனமாடியும் மகிழ்ந்தனர். நாகர்கோவில் வடசேரி ரவிவர்மன் வடக்குத்தெரு, கோட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், தக்கலை, பத்மநாபபுரம், குழித்துறை, மார்த்தாண்டம், களியக்காவிளை, குலசேகரம், கொல்லங்கோடு, நித்திரவிளை, பனிச்சமூடு, அருமனை, கருங்கல், குளச்சல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஓண பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்தது.
Related Tags :
Next Story