தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கூடலூர் அருகே 3 தொழிலாளர்களின் வீடுகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கூடலூர்
கூடலூர் அருகே 3 தொழிலாளர்களின் வீடுகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
காட்டு யானைகள் அட்டகாசம்
கூடலூர் தாலுகா தேவாலா சுற்றுவட்டார கிராமப்புறங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக அட்டி, வாழவயல் பகுதியில் மளிகை கடைகள், வீடுகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தேவாலா போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துவதாக வனத்துறையினர் மற்றும் போலீசார் உறுதி அளித்தனர்.
வீடுகளை சேதப்படுத்தின
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தேவாலா பிழாமூலா பகுதியில் 2 காட்டு யானைகள் நுழைந்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தேவாலா வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டியடித்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் அங்கிருந்து சென்றன.
ஆனால் மீண்டும் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள், தொழிலாளர்களின் வீடுகளை முற்றுகையிட்டன. தொடர்ந்து காட்டு யானைகள் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சுப்பிரமணி, கதிர்வேலு, ராமையா ஆகியோரின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தின.
மேலும் வீட்டில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தின்றன.
தப்பியோட்டம்
இதனிடையே காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்தியதை கண்ட சுப்பிரமணி, கதிர்வேலு, ராமையா குடும்பத்தினர் பீதியில் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக வெளியேறி அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக காட்டு யானைகளிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினர். பின்னர் அதிகாலையில் காட்டு யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.
இந்த சம்பவம் குறித்து அறிந்த நாடுகாணி கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜாபர் ஷரீப், தேவாலா வனத்துறையினர் நேரில் வந்து காட்டு யானைகளால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர்.
அப்போது சேதமடைந்த வீடுகளை சீரமைக்க வனத்துறையினர் உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story