வருசநாடு அருகே தடையை மீறி நிலங்களில் உழவு செய்த விவசாயிகள்; வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

வருசநாடு அருகே தடையை மீறி நிலங்களில் உழவு செய்த விவசாயிகளை வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடமலைக்குண்டு:
வருசநாடு அருகே தடையை மீறி நிலங்களில் உழவு செய்த விவசாயிகளை வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி
கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அரசரடி, இந்திராநகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். மேலும் அவர்கள் வனப்பகுதியில் பீன்ஸ், எலுமிச்சை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் மேகமலை, வருசநாடு, கண்டமனூர் ஆகிய வனத்துறையினர் சார்பில் மலைக்கிராம மக்களுக்கு சமீபத்தில் ஒரு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களில் உழவு செய்தல் உள்ளிட்ட எந்தவித விவசாய பணிகளிலும் பொதுமக்கள் ஈடுபட கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக வருசநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து வருசநாடு அருகே கோரையூத்து கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் தடையை மீறி மாடுகளை ஏர்பூட்டி உழவு பணிகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த கண்டமனூர் வனச்சரகர் ஆறுமுகம், மேகமலை வனச்சரகர் சதீஷ்கண்ணன் ஆகியோர் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள், கோரையூத்து கிராமத்திற்கு சென்று உழவு பணிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் வனத்துறை அதிகாரிகளிடம், விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த மேகமலை உதவி வனபாதுகாவலர் ரவி, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், விவசாய பணிகளில் ஈடுபட வனத்துறையினர் விதித்துள்ள தடையை நீக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் இறுதி தீர்ப்பு வரும் வரை பொதுமக்கள் யாரும் விவசாய பணிகளில் ஈடுபடக்கூடாது. இதற்கிடையே அத்துமீறி விவசாய பணிகளில் ஈடுபட்டால் கோர்ட்டு உத்தரவின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story