மாடு மேய்க்க சென்ற பெண் கற்பழித்து கொலை; நிர்வாண நிலையில் உடல் மீட்பு


மாடு மேய்க்க சென்ற பெண் கற்பழித்து கொலை; நிர்வாண நிலையில் உடல் மீட்பு
x
தினத்தந்தி 26 Aug 2021 2:48 AM IST (Updated: 26 Aug 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

துமகூரு அருகே மாடு மேய்க்க சென்ற பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டது. அவர், கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

துமகூரு: துமகூரு அருகே மாடு மேய்க்க சென்ற பெண்ணின் உடல் நிர்வாணநிலையில் மீட்கப்பட்டது. அவர், கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மாடு மேய்க்க சென்ற பெண்

துமகூரு கியாதசந்திரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹிரேஹள்ளி கிராமத்தில் 34 வயது பெண் வசித்து வந்தார். அவருக்கு திருமணமாகி கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். அந்த பெண்ணின் கணவர் கூலி வேலை செய்கிறார். அந்த பெண் வீட்டில் மாடுகளை வளர்த்து வந்தார். தினமும் அவர் தான் வளர்க்கும் மாடுகளை சிக்கஹள்ளி அருகே மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக அழைத்து செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று முன்தினம் காலையிலும் அவர் தான் வளர்க்கும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் மாலை வரை அந்த பெண் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. வேலைக்கு சென்றிருந்த பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்த போது மனைவி வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. உடனே அவர், மனைவியை பார்க்க மலைப்பகுதிக்கு சென்றார்.

நிர்வாண நிலையில் உடல்

அப்போது அங்குள்ள முட்புதரில் நிர்வாண நிலையில் தனது மனைவி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனடியாக கியாதசந்திரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தகவல் அறிந்ததும் துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராகுல்குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாாிகளும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பெண்ணின் உடலில் பல பகுதிகளில் மா்மநபர்கள் கடித்து வைத்திருந்த காயங்கள் இருந்தது. அவரது கழுத்தை நெரித்து மர்மநபர்கள் கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அந்த பெண் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததால், மர்மநபர்கள் அவரை கூட்டாக கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதையடுத்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொலை நடந்த பகுதியை ஆய்வு செய்து, அங்கு கிடந்த சாட்சி, ஆதாரங்களை சேகரித்து கொண்டனர். மலைப்பகுதியில் அந்த பெண் தனியாக மாடுகளை மேய்த்து கொண்டு இருப்பது பற்றி அறிந்த மர்மநபர்கள் குடிபோதையில் அல்லது கஞ்சா போதையில் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் அந்த பெண் அணிந்திருந்த தாலி சங்கிலியும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் மா்மநபர்கள், பெண்ணை கொன்றுவிட்டு தாலி சங்கிலியையும் கொள்ளையடித்து சென்றிருந்தனர். இதுகுறித்து கியாதசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் துமகூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story