குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டை அருகே 9 மாதங்களாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உளுந்தூர்பேட்டை
குடிநீர் வினியோகம் பாதிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
சில காரணங்களால் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து பாண்டூர் கிராமத்துக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதற்கிடையே தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகளை கண்டித்து பாண்டூர் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் பெரியெசவலை-உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
9 மாதங்களாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் பாண்டூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story