கும்பகோணம் அருகே ரெயிலில் அடிபட்டு மாணவன் பலி மாட்டை காப்பாற்ற முயன்றபோது நேர்ந்த துயரம்


கும்பகோணம் அருகே ரெயிலில் அடிபட்டு மாணவன் பலி மாட்டை காப்பாற்ற முயன்றபோது நேர்ந்த துயரம்
x
தினத்தந்தி 27 Aug 2021 11:03 PM IST (Updated: 27 Aug 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே ரெயிலில் அடிபட்டு மாணவன் பலியானான். மாட்டை காப்பாற்ற முயன்றபோது இந்த துயரம் நேர்ந்தது.

கும்பகோணம்:-

கும்பகோணம் அருகே ரெயிலில் அடிபட்டு மாணவன் பலியானான். மாட்டை காப்பாற்ற முயன்றபோது இந்த துயரம் நேர்ந்தது.

9-ம் வகுப்பு மாணவன்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் மிஷின் தெருவை சேர்ந்தவர் அருமதுரை. இவருடைய மகன் திலீப்குமார்(வயது 14). கும்பகோணத்தில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். 
தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டில் இருந்து வந்த திலீப்குமார் தங்கள் வீட்டில் வளர்த்து வரும் மாடுகளை பராமரித்து வந்தான்.

ரெயிலில் அடிபட்டு பலி

நேற்று தாராசுரம் ரெயில்வே கேட் அருகே திலீப்குமார் தங்களுக்கு சொந்தமான மாடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தான். இதில் ஒரு மாடு ரெயில் தண்டவாளம் பகுதிக்கு சென்றது. அப்போது மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி ஜனசதாப்தி விரைவு ரெயில் சென்று கொண்டிருந்தது. 
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவன் திலீப்குமார், மாடு ரெயிலில் அடிபட்டு இறந்து விடக்கூடாதே என்ற பதற்றத்தில் மாட்டை அங்கிருந்து விரட்ட ரெயில் தண்டவாளம் பகுதிக்கு ஓடினான். அப்போது எதிர்பாராதவிதமாக ரெயில் சக்கரங்களுக்கு இடையே திலீப்குமார் சிக்கிக்கொண்டான். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே திலீப்குமார் பலியானான். 

மாடு உயிர் தப்பியது

ரெயிலின் சத்தத்தை கேட்ட அதிர்ச்சியில் மாடு அங்கிருந்து ஓடி தப்பிச்சென்றது. ரெயிலில் அடிபட்டு சிறுவன் இறந்த தகவல் கும்பகோணம் ரெயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. 
தகவல் அறிந்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மாட்டை காப்பாற்ற முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த இந்த துயர சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story