வீடுகளுக்குள் புகுந்து திருடிய பெண்கள் உள்பட 4 பேர் கைது


வீடுகளுக்குள் புகுந்து திருடிய பெண்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2021 5:14 PM GMT (Updated: 2021-08-30T22:44:05+05:30)

வீடுகளுக்குள் புகுந்து திருடிய பெண்கள் உள்பட 4 பேர் கைது

கோவை

கோவையில் நடைபயிற்சி செல்வது போல் நடித்து வீடுகளுக்குள் புகுந்து திருடிய பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

செல்போன் திருட்டு

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் மைனுதீன் (வயது 22). இவர் கோவை சுக்கிரவார்பேட்டை டி.கே.வீதியில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

கடந்த 27-ந் தேதி அதிகாலையில் இவர் தங்கியிருந்த அறைக்குள் 2 பெண்கள் உள்பட 4 பேர் உள்ளே புகுந்தனர். அப்போது மைனுதீன் உள்பட நண்பர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். 

இதைப்பார்த்த அந்த மர்ம கும்பல் அங்கிருந்த மைனுதீனின் செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓடினர். இது குறித்த புகாரின்பேரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 

4 பேர் கைது 

அத்துடன்  அந்த கும்பலை பிடிக்க மேற்கு பகுதி உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 

அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதுடன், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி (45), அவருடைய மகன்கள் ஆனந்த் (27), ரமேஷ் (25) மற்றும் உறவினர் சுருளியம்மாள் (39) ஆகியோர் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:- 

நடைபயிற்சி

கிருஷ்ணவேணி தனது 2 மகன்களுடன் சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோவைக்கு வந்துள்ளார். பின்னர் அவர்கள் பேரூரில் அறை எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். 

அதில் போதிய வருமானம் கிடைக்காததால் தனது உறவினர் சுருளியம்மாளுடன் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

பகல் நேரத்தில் திருடினால் எளிதில் மாட்டிவிடுவார்கள் என்பதால் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வது போல் நடித்து பேரூர், வெரைட்டி ஹால் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருடியது தெரியவந்தது. 

தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story