நாளை கல்லூரிகள் திறப்பு: வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம் கலெக்டர் மோகன் ஆய்வு


நாளை கல்லூரிகள் திறப்பு: வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம் கலெக்டர் மோகன் ஆய்வு
x
தினத்தந்தி 30 Aug 2021 10:54 PM IST (Updated: 30 Aug 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

நாளை முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம், 

கொரோனா பெருந்தொற்றால் மூடப்பட்ட கல்லூரிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி தமிழக அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும்  வெளியிட்டுள்ளது. 

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள்,  2 அரசு மற்றும் தனியார் சட்டக்கல்லூரிகள், 26 அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 9 அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரிகள், 21 அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட துய்மை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

இப்பணிகளில், அந்தந்த பகுதி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர் ஈடுபட்டுள்ளனர்.

கலெக்டர் ஆய்வு

இந்நிலையில் விழுப்புரம் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற  தூய்மைப்பணியை நேற்று காலை மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கல்லூரி வளாகம், வகுப்பறைகள்,  ஆசிரியர்கள் அறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் நன்கு சுத்தப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் அடிக்கடி கை கழுவும் வகையில் சோப்பு மற்றும் தண்ணீர் வசதி இருக்க வேண்டும். வகுப்பறைகளில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும் என்று, தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்றிட வேண்டும்,

 மாணவர்களே பாட்டிலில் தண்ணீர் கொண்டு வருமாறு அறிவுறுத்த வேண்டும் என்று பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என்று அங்கிருந்த கல்லூரி பேராசிரியர்களிடம் தெரிவித்தார். மேலும் இவை அனைத்தையும் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

Next Story