இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை; காதலன் தற்கொலை முயற்சி

வேறொருவருடன் திருமணத்துக்கு சம்மதித்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த காதலன், தானும் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் உடுப்பியில் நடந்துள்ளது.
மங்களூரு:
காதல்
கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் சந்தேஷ் குலால். இவர் உடுப்பியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும், உடுப்பியில் உள்ள தனியார் வங்கியில வேலை பார்த்து வந்த அம்பாகிலு கிராமத்தை சேர்ந்த சவுமியா (வயது 25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சவுமியாவுக்கு வீட்டில் வேறொரு வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்தனர். இந்த திருமணத்துக்கு சவுமியாவும் சம்மதித்ததாக தெரிகிறது.
இதுபற்றி அறிந்த சந்தேஷ், சவுமியாவிடம் இதுபற்றி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சவுமியா சந்தேசுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால், சவுமியா மீது சந்தேசுக்கு ஆத்திரம் வந்தது.
கத்திக்குத்து
இந்த நிலையில் நேற்று சவுமியா வங்கியில் வேலையை முடித்து வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை பின்தொடர்ந்து சந்தேசும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சந்தேகட்டே பகுதியில் வைத்து சவுமியாவின் ஸ்கூட்டரை சந்தேஷ் மறித்துள்ளார். அப்போது, அவரிடம் தன்னை காதலித்து விட்டு வேறொருவரை திருமணம் செய்ய சம்மதித்தது ஏன் என்று சந்தேஷ் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சந்தேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சவுமியாவை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் பலத்த கத்திக்குத்து காயமடைந்த சவுமியா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் சந்தேசும், தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டார். அவருக்கும் உயிருக்கு போராடினார்.
இளம்பெண் சாவு
நடுரோட்டில் நிகழ்ந்த இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து அந்தப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பின்னர் அவர்கள், உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணிபால் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். சந்தேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி அறிந்த உடுப்பி டவுன் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்றும் விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தன்னை காதலித்து விட்டு வேறொரு வாலிபருடன் திருமணத்துக்கு சம்மதித்ததால் ஆத்திரமடைந்த சந்தேஷ், சவுமியாவை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story