கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளபோது போலி ஆவணம் தயாரித்து 4 ஏக்கர் நிலம் மோசடி தாய் மகன் கைது


கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளபோது போலி ஆவணம் தயாரித்து 4 ஏக்கர் நிலம் மோசடி தாய் மகன் கைது
x
தினத்தந்தி 31 Aug 2021 10:56 PM IST (Updated: 31 Aug 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளபோது போலி ஆவணம் தயாரித்து 4 ஏக்கர் நிலத்தை விற்று மோசடி செய்த வழக்கில் தாய்-மகன் இருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி

விவசாயி

கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மகன் மோகன்(வயது 32). விவசாயியான இவர் தனது தாத்தா பெரியகவுண்டர், பாட்டி அத்தாயி ஆகியோருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு மோகனின் அத்தை சுந்தராம்பாள்(58) தனது தந்தை பெரியகவுண்டர், தாய் அத்தாயி ஆகியோரிடம் வங்கி கடன் பெறுவதற்காக என்று கூறி பத்திரத்தில் கையெழுத்து போடச்சொல்லி மேற்படி நிலத்தை தன் பெயரில் தான செட்டில்மெண்ட் எழுதி வாங்கிக்கொண்டார். 

கோர்ட்டில் வழக்கு

இதை அறிந்த மோகன் தான் அனுபவித்து வரும் நிலத்தை வயதான தாத்தா, பாட்டியை ஏமாற்றி தானசெட்டில்மெண்ட் வாங்கிக் கொண்டதாக கூறி சுந்தராம்பாள் மீது கள்ளக்குறிச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தான செட்டில்மண்ட் அசல் பத்திரத்தையும் கோர்ட்டில் ஒப்படைத்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது  தான செட்டில்மெண்ட் பத்திரம் தொலைந்து விட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து அதற்கான சான்று பெற்று 4½ ஏக்கர் நிலத்தை பரங்கிநத்தம் பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் வேலுச்சாமி(44) என்பருக்கு சுந்தராம்பாள் கிரையம் கொடுத்துள்ளார். 

தாய்-மகன் கைது

இதை அறிந்து கொண்ட மோகன் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சுந்தராம்பாள், இவரது கணவர் கந்தசாமி(65), மகன்கள் சசிகுமார்(40), விஜயகுமார்(38) மற்றும் நிலத்தை வாங்கிய வேலுச்சாமி, சாட்சி கையெழுத்திட்ட சுரேஷ், சரவணன் ஆகிய 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தராம்பாள், சசிகுமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story