கைதான மாநகராட்சி ஊழியர் பணி இடைநீக்கம்


கைதான மாநகராட்சி ஊழியர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 2 Sept 2021 2:13 AM IST (Updated: 2 Sept 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

கைதான மாநகராட்சி ஊழியர் பணி இடைநீக்கம்

சேலம், செப்.2-
சேலத்தில் திராவகம் வீசி மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான மாநகராட்சி ஊழியரை பணி இடைநீக்கம் செய்து ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
திராவகம் வீச்சு
சேலம் குகை ஜவுளி கடை பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 52). மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (47). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த 30-ந் தேதி ஏசுதாஸ் திராவகம் வீசியதில் ரேவதி உடல் வெந்து பலியானார்.
ரேவதி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததாகவும், அதை கைவிட பலமுறை கூறியும், அவர் மறுத்து விட்டு அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. 
இந்த நிலையில் ரேவதியை அவருடைய கணவர் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. மேலும் கணவர் மீது போலீசில் புகார் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏசுதாஸ் மனைவி மீது திராவகம் வீசி கொலை செய்ததாக போலீசார் விசாரணையின் போது அவர் வாக்குமூலம் அளித்தார்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து மனைவியை கொலை செய்த ஏசுதாசை போலீசார் கைது செய்து நேற்று ஆத்தூர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ரேவதியின் உடலை பெற்றுக்கொள்ள அவருடைய மகன்கள் மற்றும் உறவினர்கள் முதலில் முன்வரவில்லை. பின்னர் போலீசாரின் அறிவுரையை ஏற்று அவர்கள் உடலை பெற்றுச்சென்றனர்.
ஏசுதாஸ் கொசுமருந்து அடிக்கும் எந்திரத்தில் ஒட்டி உள்ள கரும்புகையை அகற்றுவதாக கூறி செவ்வாய்பேட்டையில் உள்ள கடையில் திராவகம் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள ரேவதியின் கள்ளக்காதலனை தேடி வருகிறோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
பணி இடைநீக்கம்
இதனிடையே மனைவியை திராவகம் வீசி கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஊழியர் ஏசுதாஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பிறப்பித்தார்.

Next Story