3 மாநகராட்சிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு

உப்பள்ளி-தார்வார், பெலகாவி, கலபுரகி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.
பெங்களூரு:
மாநகராட்சி தேர்தல்
கர்நாடகத்தில் பெங்களூரு, மங்களூரு, மைசூரு, தாவணகெரே, பல்லாரி, கலபுரகி, உப்பள்ளி-தார்வார், பெலகாவி ஆகிய 8 மாநகராட்சிகள் உள்ளன. இதில் உப்பள்ளி-தார்வார், கலபுரகி, பெலகாவி ஆகிய 3 மாநகராட்சிகளில் உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதையொட்டி அந்த மாநகராட்சிகளுக்கு செப்டம்பர் 3-ந்தேதி (அதாவது நாளை) தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில் ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் 3 மாநகராட்சிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். ஜனதா தளம் (எஸ்), கலபுரகி, உப்பள்ளி-தார்வார் மாநகராட்சிகளில் போட்டியிட்டுள்ளது. உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் 82 வார்டுகளும், கலபுரகியில் 55 வார்டுகளும், பெலகாவியில் 58 வார்டுகளும் என மொத்தம் 195 வார்டுகள் உள்ளன.
தீவிர தேர்தல் பிரசாரம்
இந்த 3 மாநகராட்சிகளும் முக்கியமானவை என்பதால் அவற்றை கைப்பற்ற பா.ஜனதா வியூகம் வகுத்து பிரசாரம் செய்துள்ளது. அதே போல் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், அந்த மாநகராட்சிகளில் வெற்றி வாகை சூடி, ஆளுங்கட்சியான பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.
ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கணிசமான வார்டுகளில் வெற்றி பெறக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்த மாநகராட்சிகளில் கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி உள்பட அக்கட்சிகளின் முன்னணி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.
பகிரங்க பிரசாரம் ஓய்ந்தது
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த பகிரங்க பிரசாரம் நேற்று காலை 7 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த 3 மாநகராட்சிகளிலும் நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. மாலை 5 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த தேர்தலுடன் மைசூரு மாநகராட்சியில் காலியாக உள்ள ஒரு வார்டு மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 20 வார்டுகளுக்கும் நாளையும் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 6-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
நோய் தடுப்பு நடவடிக்கைகள்
கொரோனா பரவி வருவதால், வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், வாக்குச்சாவடிகளில் சானிடைசர் கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர்கள் வரிசையில் நிற்கும்போது தனிமனித இடைவெளியை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறுவதையொட்டி 3 மாநகராட்சி பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததால் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலையொட்டி உப்பள்ளி-தார்வார், பெலகாவி, கலபுரகி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story