குமரியில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு


குமரியில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
x
தினத்தந்தி 1 Sep 2021 9:13 PM GMT (Updated: 1 Sep 2021 9:13 PM GMT)

கொரோனா பாதிப்பு குறைந்ததால் குமரியில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்பறைக்கு வந்தனர்.

நாகர்கோவில்:
கொரோனா பாதிப்பு குறைந்ததால் குமரியில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்பறைக்கு வந்தனர்.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு
கண்ணுக்கு தெரியாத கொரோனாவின் கோரதாண்டவத்தால் உலக மக்கள் துயரத்தின் பிடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். அந்த கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டது. அப்போது மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. 
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது மாணவர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளிகள் மீண்டும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. எனினும் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கொரோனா 2-வது அலை தற்போது ஓரளவு குறைந்துள்ளதால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி செப்டம்பர் மாதம் 1-ந் தேதி மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதாவது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி பள்ளிகளில் மேஜைகள், நாற்காலிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. அரசு அறிவித்தபடி நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன.
சமூக இடைவெளி
குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 483 பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். 
பள்ளிகளில் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டும் சமூக இடைவெளியை பின்பற்றி அமரவைக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பள்ளிகளில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒரு பகுதி மாணவ-மாணவிகளுக்கும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மீதமுள்ள மாணவ-மாணவிகளுக்கும் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டன. 
வகுப்புகள்
அதில் நேற்று புதன்கிழமை என்பதால் அன்றைய தினம் பள்ளிக்கு வரவேண்டிய மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் மட்டும் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20-க்கும் குறைவாகவே உள்ளது. எனவே அதுபோன்ற அரசு பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பு நடந்தது.
அரசு மற்றும் தனியார் கலை கல்லூரிகள், என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனைத்து நாட்களிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அதே சமயத்தில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
மாணவ, மாணவிகள் உற்சாகம்
தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப பரிசோதனை செய்த பிறகே மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். கைகளை சுத்தம் செய்ய சானிடைசரும் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஆசிரியர்கள், ஆசிரியைகள் கட்டாயம் 2 கட்ட தடுப்பூசிகளை செலுத்தி இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி 2 கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் நேற்று பள்ளிக்கு வந்தனர். வகுப்பறைகளில் மாணவ, மாணவிகள் முக கவசம் அணிந்தபடி பாடங்களை கவனித்தனர்.
குமரி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் அனைவரும் பள்ளி சீருடை அணிந்து மிகவும் உற்சாகமாக பஸ்சில் புறப்பட்டு பள்ளிகளுக்கு வந்ததை பார்க்க முடிந்தது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் பஸ்களில் மாணவ-மாணவிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த சில மாதங்களாக ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்கிடந்த பள்ளிக்கூட வளாகங்கள் நேற்று மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரின் நடமாட்டத்தால் மீண்டும் பழைய உற்சாக நிலையை எட்டியுள்ளது என்றால் மிகையாகாது.

Next Story