ராணிப்பேட்டை மாவட்டத்தில் 600 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் 600 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 3 Sep 2021 4:39 PM GMT (Updated: 3 Sep 2021 4:39 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் 600 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர் என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் 600 மாணவ- மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர் என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறினார்.

600 மாணவ- மாணவிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீட் தேர்வு நடத்துவது தொடர்பாக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீட் தேர்வு வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. சிப்காட் பெல் நிறுவனத்தில் உள்ள டி.ஏ.வி.மேல்நிலைப்பள்ளியில் 360 பேர், மேல்விஷாரம் குளோபல் பொறியியல் கல்லூரியில் 240 பேர் என மொத்தம் 600 மாணவ -மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர். மாணவ -மாணவிகள் தேர்வு மையத்திற்குள் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு அறைக்குள் பிற்பகல் 1.40 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

ஆயுதம் ஏந்திய போலீஸ்

 மாணவ- மாணவிகள் கட்டாயம் தேர்வு நுழைவு சீட்டை கையில் கொண்டு வர வேண்டும். தேர்வு மையத்திற்குள் செல்வதற்கு முன்னதாக பரிசோதனை செய்து அனுமதிக்கப்படுவார்கள். மத்திய அரசு பணியாளர்கள் இப்பணியினை மேற்கொள்வார்கள். காவல்துறையினர் அவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

ஒவ்வொரு மையத்திலும் பாதுகாப்பிற்கு ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 5 காவலர்கள், 2 பெண் காவலர்கள் பணியில் இருக்க வேண்டும். வினாத்தாள் கொண்டு வருவதற்கும், பின்னர் விடைத்தாள்களை கொண்டு சேர்க்கவும் ஆயுதம் ஏந்திய போலீசார் பணியமர்த்தப்பட வேண்டும். தீயணைப்பு வாகனம், அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். சுகாதார துறையினர் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த வேண்டும்.

சிறப்பு பஸ்கள்

தேர்வு மையத்தில் தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதிகள் இருப்பதை வருவாய்த் துறையினர் மற்றும் மின்சார துறையினர் உறுதி செய்ய வேண்டும். தேர்வு எழுத வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து மாணவ- மாணவிகள் வருகை தருவார்கள். அவர்கள் எளிதில் வந்து செல்ல காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை 2 மையங்கள் வழித்தடங்களில் அதிகளவில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணிப்பேட்டை நகரப்பகுதியில் இருந்து தேர்வு மையத்திற்கு இரவுவரை டவுன் பஸ் இயக்கம் இருக்க வேண்டும். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும்பாலும் கிராம பகுதிகளில் இருந்து மாணவர்கள் வருவார்கள். அனைத்துப் பகுதிகளிலும் இருந்து குறித்த நேரத்தில் வந்து சேர்ந்திட தேவையான பஸ் வசதியினை போக்குவரத்து கழகம் செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு மையத்தில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திட வேண்டும். வருகை தரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேவையான உணவு வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். நீட்தேர்வு எவ்வித இடையூறுமின்றி நடந்திட அலுவலர்கள் தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை கோட்டாட்சியர் சுரேஷ், நீட் தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கருப்பையா, பிரகாஷ் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story