நிலபுரோக்கர்-மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு


நிலபுரோக்கர்-மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 4 Sep 2021 2:23 PM GMT (Updated: 4 Sep 2021 2:23 PM GMT)

கயத்தாறு அருகே நிலபுரோக்கர், அவரது மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

கயத்தாறு:
கயத்தாறு அருகே நிலபுரோக்கர், அவரது மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர். 

நிலபுரோக்கர்

கயத்தாறு அருகே உள்ள ஓனமாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன் (வயது 57). இவர் நிலபுரோக்கராக உள்ளார். 

ஒட்டநத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (60), இவருடைய தம்பி போத்திராஜ். இவர்கள் இருவரும் விவசாயிகள். இவர்களுக்கு ஓனமாக்குளம் கிராமத்தில் 2½ சென்ட் நிலத்தில் உள்ள ஒரு ஓட்டு வீடு தொடர்பாக பிரச்சினை உள்ளது. 

சமரசம்

இந்த நிலையில், அந்த இடப்பிரச்சினையை குருநாதன் சமரசம் பேசி தருவதாக கூறியுள்ளார். ஆனால் குருநாதன் அதை இழுத்தடிப்பதாகவும், போத்திராஜுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பாலமுருகன் கருதினார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பாலமுருகன் ஓனமாக்குளம் கிராமத்தில் உள்ள குருநாதன் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர், குடும்பத்தில் சிறு பிரச்சினை இருப்பதாகவும், இதனால் இரவு மட்டும் இங்கு தங்கி செல்வதாகவும் கூறிஉள்ளார்.

அரிவாள் வெட்டு

உடனே அவருக்கு உணவு கொடுத்து தங்கவும் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு, குருநாதன், அவரது மனைவி ரமணி ஆகிய இருவரும் தூங்கி விட்டனர். 

பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் பாலமுருகன் எழுந்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த குருநாதன், ரமணி ஆகியோரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் பாலமுருகன் அங்கிருந்து ஓடி விட்டார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த குருநாதன், ரமணி ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.

Next Story