சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து சிவதாபுரத்துக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க புதிய கால்வாய் அமைக்கும் பணி-மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து சிவதாபுரத்துக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க புதிய கால்வாய் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து சிவதாபுரத்துக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க புதிய கால்வாய் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது குமரகிரி ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் மற்றும் பச்சப்பட்டி, வெள்ளகுட்டை கால்வாய் வழியாக வரும் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது. இதனை ஆய்வு செய்த ஆணையாளர் கிறிஸ்துராஜ், பச்சப்பட்டி பகுதியில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதனை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், இந்த பணிகளை விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கால்வாய்
சூரமங்கலம் மண்டலத்துக்குட்பட்ட சேலத்தாம்பட்டி ஏரிக்கு மழை காலங்களில் அதிகளவு நீர்வரத்து வருகின்றது. ஏரிக்கு வரும் தண்ணீரை வெளியேற்றுவதற்கு தேவையான கால்வாய் வசதி இல்லை. இதனால் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சிவதாபுரம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
இந்த நிலையில் சேலத்தாம்பட்டி ஏரிக்கு வருகின்ற மழைநீரை வெளியேற்ற காட்டூர் ரெயில்வே லைன், ஆண்டிப்பட்டி, இந்திரா நகர் வழியாக செஞ்சிக்கோட்டையில் உள்ள ஓடையில் கலந்து திருமணிமுத்தாற்றில் செல்லும் வகையில் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நிலம் சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஆணையாளர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொட்டும் மழையில்
இதனிடையே சேலத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் நாராயண நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் காளிதாசர் தெரு, சிவதாபுரம், சித்தர்கோவில், எம்.ஜி.ஆர்.நகர், கிச்சிப்பாளையம், திருமணிமுத்தாறு, பச்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
கொட்டும் மழையில் நனைந்தபடி சேத பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கால்வாய் தூர்வாருதல், சாக்கடை அடைப்புகளை சரி செய்தல், சாலையில் தேங்கிய மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் புகுந்த மழைநீரை வெளியேற்றவும், அந்த பகுதி மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணையாளர் கிறிஸ்துராஜ் அறிவுரை வழங்கினார். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் முனியப்பன் கோவில் அருகில் தேங்கிய மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. மாநகராட்சியில் உள்ள அனைத்து பிரிவு அலுவலர்களும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story