வருமானம் ஈட்டி தரும் வேப்பங்கொட்டைகள்


வருமானம் ஈட்டி தரும் வேப்பங்கொட்டைகள்
x
தினத்தந்தி 9 Sep 2021 10:40 PM GMT (Updated: 9 Sep 2021 10:40 PM GMT)

போடிப்பட்டி அருகே கிராமங்களில் பலருக்கு வேப்பங்கொட்டைகள் வருமானம் ஈட்டி தந்து கொண்டிருக்கிறது.

போடிப்பட்டி
போடிப்பட்டி அருகே கிராமங்களில் பலருக்கு வேப்பங்கொட்டைகள் வருமானம் ஈட்டி தந்து கொண்டிருக்கிறது. 
வருமானம் 
கிராமங்களின் மருந்தகம் என்று அழைக்கப்படும் வேப்பமரங்கள் இலை, பூ, பழம், பட்டை, இலைக்காம்பு என்று அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது. அதேநேரத்தில் வேப்பங்கொட்டைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. நகரப்பகுதிகளில் மரங்களிலிருந்து உதிர்ந்து வாகனங்களின் சக்கரங்களில் சிக்கி வீணாகும் வேப்பங்கொட்டைகள் பலருக்கும் வருமானம் தரக்கூடிய ஒன்றாக உள்ளது. தென்மாவட்டங்களில் இதனை வேப்ப முத்து என்பார்கள். 
கடலில் மூழ்கி எடுக்கும் முத்தைப் போல இதனையும் மதிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் வேப்பங்கொட்டைகளை முத்து என்று அழைக்கிறார்களோ என்று எண்ண தோன்றும் அளவிற்கு இருக்கிறது.  தற்போது வேப்பங்கொட்டைகள் சீசன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஊரடங்கால் வருவாய் இழப்பை சந்தித்த அடித்தட்டு மக்களுக்கு இதன் மூலம் ஓரளவு தினசரி வருமானம் கிடைத்துள்ளது.
இயற்கை விவசாயம்
இதுகுறித்து மடத்துக்குளத்தையடுத்த கணியூரைச் சேர்ந்த வேப்பங்கொட்டை வியாபாரி ஒருவர் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டிலும் குறிப்பிட்ட சில மாதங்களே வேப்ப மரங்களில் பழங்கள் பழுத்து உதிரும். மேலும் பழங்களை பறவைகள் தின்று கொட்டைகளை கீழே போடும். இவற்றை ஒருசிலர் சேகரித்து எங்களைப் போன்ற வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறார்கள். 
அவற்றை தோலுடன் இருந்தால் ஒரு கிலோ ரூ.30-க்கும் தோலில்லாமல் இருக்கும் கொட்டைகளை கிலோ ரூ.60 வரையிலும் வாங்குகிறோம். வேப்பங்கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வேப்பெண்ணை மற்றும் கழிவாக கிடைக்கும் வேப்பம்புண்ணாக்கு போன்றவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இயற்கை விவசாயத்தில் பெருமளவு இவை பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர நாட்டு மருத்துவத்திலும் வேப்பெண்ணெயின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. தற்போது இயற்கை விவசாயத்துக்கு மவுசு கூடியுள்ள நிலையில் இவற்றின் தேவையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வேப்பங்கொட்டைக்கான தேவை உள்ளது. வேப்பங்கொட்டைகளை இருப்பு வைத்து ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story