நிலக்கடலை விதை பண்ணையில் கலெக்டர் ஆய்வு

அவினாசி அருகே நிலக்கடலை விதை பண்ணையில் கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.
திருப்பூர்
அவினாசி அருகே நிலக்கடலை விதை பண்ணையில் கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.
விதை நிலக்கடலை பண்ணை
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த அல்லது அருகில் உற்பத்தி செய்த விதைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இதனால் பிற இன கலவன் அதிகம் ஏற்பட்டு, ஒரேநேரத்தில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்ல அறுவடை செய்த தானியத்திற்கு உரிய விலை கிடைக்காமல் பல்வேறு சிரமங்களை விவசாயிகள் சந்தித்து வந்தனர்.
தற்போது சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்துவதால் அதிக முளைப்புத்திறன், சீரான வளர்ச்சி, ஒரே நேரத்தில் முதிர்ச்சியடைந்து அறுவடைக்கு வருதல் மற்றும் அதிக மகசூல் கிடைப்பதால் உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்கு தகுந்தவிலை கிடைக்கிறது.
விவசாயிகளின் விதை தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு விதை சான்று அலுவலர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. பின்னர் கலவன் நீக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பகுப்பாய்வு அறிக்கையில் விதை தரத்தில் தேறும் பட்சத்தில் சான்றட்டை பொருத்தப்பட்டு விவசாயிகளுக்கு விதையாக வினியோகம் செய்யப்படுகிறது.
ஆய்வு
அவினாசி வட்டாரத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் விதை தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் நிலக்கடலை விதைப்பண்ணையானது 130 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது முதிர்ச்சி பருவத்தில் கந்தசாமி என்பவரது நிலக்கடலை விதைப்பண்ணையை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.
நிலக்கடலை தரணி ரகமானது குறைந்த நாட்களில் (105 நாட்கள்) அதிக மகசூல் தரவல்லது. இந்த ரகத்தில் ஏக்கருக்கு 1 மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும். இந்த ரகத்தின் குணாதிசயங்கள் பற்றி கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் விதைப்பண்ணை ஆய்வின்போது பின்பற்றப்படும் நடைமுறைகள், பிற ரக கலவன் நீக்கம் குறித்தும் விதைசான்று அலுவலர் கவிதா எடுத்துக்கூறினார். விதை சான்று அலுவலர் ஆய்வு மேற்கொள்ளும்போது விதை தரத்தில் எந்த வித குறைபாடும் ஏற்படா வண்ணம் ஆய்வு மேற்கொண்டு தரமான பிற ரக கலப்பற்ற நல்ல விதைகள் விவசாயிகள் பெற ஏதுவாக பணி புரிய வேண்டும். விதை பற்றாக்குறை ஏற்படாதவாறு தரமான விதை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என கலெக்டர் கூறினார். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு, உதவி விதை ஆய்வாளர் தனபால் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story