தடையை மீறி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு


தடையை மீறி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
x
தினத்தந்தி 10 Sep 2021 5:41 PM GMT (Updated: 10 Sep 2021 5:41 PM GMT)

தடையை மீறி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து இந்து முன்னணியினர் வழிபட்டனர். இதனை தடுத்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு போராட்டமும் நடத்தினர்.

விழுப்புரம், 

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச்செல்லவும் அரசால் தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் சிறு, சிறு விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதனிடையே காலை 11 மணியளவில் இந்து முன்னணியினர் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் திரண்டு வந்தனர். அவர்களிடம் அரசு உத்தரவின்படி விநாயகர் சிலையை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தக்கூடாது என்றும், மீறினால் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவதற்காக 2 அடி உயரமுள்ள சிலையை கொண்டு வந்தனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அந்த விநாயகர் சிலையை கைப்பற்றினர்.
பின்னர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியின் கோட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். பா.ஜ.க. நிர்வாகி சுகுமார், மாவட்ட தலைவர் சதீஷ், மாவட்ட செயலாளர் அருண் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நகர தலைவர் தரணிதரன், நகர செயலாளர்கள் வெங்கடேசன், தேசிங்கு, வக்கீல் அணி மாவட்ட பொறுப்பாளர்கள் சரவணன், சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டு விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட தடை விதித்த அரசை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

சிலையை வைத்து வழிபாடு

அப்போது செல்லும் வழியில் அவர்கள் பழைய பஸ் நிலைய பெட்ரோல் நிலையத்தின் எதிரே திடீரென 1 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை கொண்டு வந்து அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர். உடனே போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த விநாயகர் சிலையையும் போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து இந்து முன்னணியினர் அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு பின்னர் கலைந்து சென்றனர்.

கள்ளக்குறிச்சி

இதேபோல் இந்து முன்னணி கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், ஒன்றிய பொறுப்பாளர்கள் முத்துராமன், ராஜேந்திரன் மற்றும் பா.ஜ.க.மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ், தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் அருண்குமார், நகர செயலாளர் சுதாகர் உள்ளிட்ட வழிபாட்டுக்குழுவினர் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மந்தை வெளிபொதுக்கூட்ட மேடையில் வைத்து 3 அடி உயரம் உள்ள விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினர். 

வாக்குவாதம்

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தாசில்தார் விஜய்பிரபாகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் அதிகாரிகள் விநாயகர் சிலையை அங்கிருந்து எடுத்துச் சென்று சிதம்பரேஸ்வரர் கோவிலில் வைத்தனர். அப்போது இந்து முன்னணி மற்றும் வழிபாட்டு குழுவினர் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பியபடி  கோவிலுக்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். 

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் கிராமத்திலிருந்து சிலர் 3 மினிலாரிகளில் சுமார் 4 அடி உயரமுள்ள 3 விநாயகர் சிலைகள் ஏற்றிக்கொண்டு வடக்கு நெமிலி நோக்கி செல்வதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மினிலாரிகளை மடக்கி 3 விநாயகர் சிலைகளை கைப்பற்றி, திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் வைத்தனர். இந்த சம்பவங்களால்  பரபரப்பு ஏற்பட்டது. 

திண்டிவனம் 

திண்டிவனம் பெலாக்குப்பம் சாலையில் இந்து முண்ணனி மாவட்ட செயலாளர் பிரபுவின் சகோதரர் முத்தையா(வயது 35) என்பவர் தனது வீட்டு சுற்றுச்சுவரில் 5 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்து வழிபட்டார். இது பற்றி அறிந்ததும் திண்டிவனம் போலீசார் விரைந்து சென்று விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர். இதேபோல் பூதேரியில் நகர செயலாளர் ஜெகன் தனது வீட்டின் முன்பு வைத்திருந்த  3 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை தாசில்தார் செல்வம் பறிமுதல் செய்தார்.

Next Story