ரெயில் முன்பாய்ந்து நகை பட்டறை உரிமையாளர் தற்கொலை


ரெயில் முன்பாய்ந்து நகை பட்டறை உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 10 Sep 2021 7:48 PM GMT (Updated: 2021-09-11T01:18:55+05:30)

கடன் தொல்லையால், ரெயில் முன்பாய்ந்து நகைப்பட்டறை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில், 
கடன் தொல்லையால், ரெயில் முன்பாய்ந்து நகைப்பட்டறை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆண் பிணம்
குமரி மாவட்டம் இரணியல் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று காலை காயங்களுடன் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார்ராஜ், பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு        அனுப்பி வைத்த னர். முதலில் பிணமாக கிடந்தவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. 
நகைப்பட்டறை உரிமையாளர்
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் மார்த்தாண்டம் அடப்புவிளையை சேர்ந்த முத்து கணேஷ் (வயது 36) என்பதும், மார்த்தாண்டம் பகுதியில் சொந்தமாக நகை பட்டறை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் பலரிடம் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது.
இருப்பினும் தொடர்ந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, கடனை அடைக்க முடியாமல் அவர் அவதிப்பட்டுள்ளார். மேலும், பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவருக்கு வாழ்க்கையின் மீது விரக்தி ஏற்பட்டுள்ளது. 
ரெயில் முன் பாய்ந்தார்
இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட முத்துகணேஷ், இரணியல் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக அனந்தபுாி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. உடனே முத்து கணேஷ், கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தற்கொலை செய்து கொண்ட முத்துகணேசுக்கு, ஸ்ரீஜா என்ற மனைவியும், சிவசுடன் (10) என்ற மகனும், சிவசக்தி (7) என்ற மகளும் உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் ரெயில் முன் பாய்ந்து நகை பட்டறை உரிமையாளர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story