விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் அளவிடும் பணி தொடங்கியது


விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் அளவிடும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 10 Sep 2021 8:22 PM GMT (Updated: 10 Sep 2021 8:22 PM GMT)

விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் அளவிடும் பணி தொடங்கியது

ஓமலூர்,செப்.11-
ஓமலூர் பகுதியில் விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் அளவிடும் பணி தொடங்கியது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விமான நிலைய விரிவாக்க பணி
ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்துக்கு உட்பட்ட காமலாபுரம், சிக்கம்பட்டி, பொட்டிபுரம், தும்பி பாடி ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேலம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் சேலத்தில் இருந்து சென்னைக்கு ‘ட்ரூஜெட்’ விமான சேவை நடந்து வருகிறது.
இந்தநிலையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக விமான நிலையத்தை சுற்றி உள்ள காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டிபுரம், தும்பிபாடி ஆகிய 4 ஊராட்சிகளில் சுமார் 590 ஏக்கர் பரப்பளவில் நிலம் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
நிலம் அளவிடும் பணி
இதில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள இடத்தில் உள்ள வீடுகள், தென்னை மரங்கள் மற்றும் அந்த நிலங்களில் அப்போதைய நிலவரங்கள் குறித்து கணக்கீடு செய்யும் பணி நடந்து வந்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன்பிறகு சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா பரவல் காரணமாக அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையே தற்போது விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் அளவீடு பணி தொடங்கி உள்ளது. விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார் சீனிவாசன் தலைமையில் அதிகாரிகள் நேற்று சிக்கணம்பட்டி, பொட்டிபுரம் ஆகிய ஊராட்சிகளில் ஏற்கனவே கணக்கீடு செய்யப்பட்ட விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு வெளி மார்க்கெட் அளவிற்கு நிலத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story