படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான செயல் விளக்கம்


படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான செயல் விளக்கம்
x
தினத்தந்தி 10 Sep 2021 10:24 PM GMT (Updated: 10 Sep 2021 10:24 PM GMT)

உடுமலை வட்டாரத்தில் ஒருங்கிணைந்த முறையில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான செயல் விளக்கங்களை வேளாண் பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது.

போடிப்பட்டி
உடுமலை வட்டாரத்தில் ஒருங்கிணைந்த முறையில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான செயல் விளக்கங்களை வேளாண் பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
உடுமலை வட்டாரத்தில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளத்தில் படைப்புழுக்கள் தாக்குதல் அதிக அளவில் உள்ளது.இதனால் விவசாயிகள் மகசூல் இழப்பைச் சந்திப்பதுடன், பூச்சி மருந்துக்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
இதனைத் தவிர்க்கும் விதமாக உடுமலை வட்டாரத்தில் 3 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அந்த கிராமங்களில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை மூலம் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல்வெளி செயல் விளக்கம் வழங்கப்படவுள்ளது.இதற்கென குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, ஆண்டியகவுண்டனூர் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பூச்சிக்கொல்லி
அதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் 5 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் 15 செயல் விளக்கத் திடல்கள் உருவாக்கப்படவுள்ளன.இதில் ஒவ்வொரு விவசாயிக்கும் வேப்பம்புண்ணாக்கு 75 கிலோ, இனக்கவர்ச்சிப் பொறிகள் 5 மற்றும் விதை நேர்த்தி மருந்தான சையான்டிரினில்புரோல் 19.8 எப்எஸ், தயோமீதாக்ஸம் 9.8 எப்எஸ் 32 மிலி வழங்கப்பட்டது. மேலும் பயிரின் 20 முதல் 25 ம் நாள் வளர்ச்சி நிலையில் தெளிப்பதற்காக அசாடிராக்டின் 1500 பிபிஎம் ஒரு லிட்டருக்கு வழங்கப்பட்டது.
அத்துடன் ஒவ்வொரு கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கும் ஒவ்வொரு விதமான பூச்சிக்கொல்லி மருந்துகள் என 3 விதமான பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டது. இதன் ஆய்வு முடிவுகளை தமிழ்நாடு பூச்சியியல் துறைத் தலைவர் சண்முகம் மற்றும் உடுமலை வேளாண்துறையினர் இணைந்து கண்டறிய உள்ளனர் என்று உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி தெரிவித்தார்.

மேலும் கடைசி உழவின் போது வேப்பம்புண்ணாக்கு இடுவதன் நன்மைகளை விவசாயிகள் நேரடியாகக் கண்டறியும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள 75 கிலோ வேப்பம் புண்ணாக்கை 75 சென்ட் நிலத்தில் மட்டுமே இடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மீதமுள்ள வேப்பம் புண்ணாக்கு இடப்படாத நிலத்தில் படைப்புழுக்களின் தாக்குதலில் வித்தியாசத்தை விவசாயிகள் உணர வகை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த செயல் விளக்க ஆய்வின் முடிவில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவதில் வீரியமிக்க வழிமுறைகள் கண்டறியப்பட்டு அனைத்து விவசாயிகளுக்கும் அதனைப் பரிந்துரைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

Next Story