கோவையில் 7 மையங்களில் 5778 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்
கோவையில் 7 மையங்களில் 5,778 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் ஆபரணங்கள் அணிந்து வர அனுமதிக்க வில்லை.
கோவை
கோவையில் 7 மையங்களில் 5,778 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் ஆபரணங்கள் அணிந்து வர அனுமதிக்க வில்லை.
நீட் தேர்வு
நாடு முழுவதும் 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடைபெற்றது.
இதற்காக கோவை மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா என்ஜினீயரிங் தொழில்நுட்ப கல்லூரி, ரத்தினம் கலைக்கல்லூரி, ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரி, சரஸ்வதி வித்யா மந்திர், கற்பகம் அகாடமி பள்ளி, நேஷனல் மாடல் பள்ளி ஆகிய 7 கல்வி நிலையங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வு எழுத 6 ஆயிரத்து 57 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
5,778 பேர் எழுதினர்
இதில் 281 பேர் வரவில்லை. மீதி 5,778 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது.
கொரோனா அச்சம் காரணமாக ஒரே நேரத்தில் தேர்வு மையத்தில் குவிவதை தடுக்க, மாணவ-மாணவி களுக்கு வழங்கப்பட்ட நுழைவு சீட்டில் எத்தனை மணிக்கு தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
காலை 11 மணி முதல் மதியம் 1.45 மணி வரை மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். மேலும் தேர்வு மையம் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆபரணங்கள் அணிய தடை
தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள், தாங்கள் அணிந்து இருந்த நகைகள், கம்மல், வளையல், மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்களை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
இதையடுத்து மாணவிகள் நகைகளை பெற்றோரிடம் கழற்றி கொடுத்தனர்.
ஒரு சில மாணவிகள் காலில் அணிந்து இருந்த கொலுசுக்களை கழற்ற முடியாமல் அவதியடைந்தனர்.
அவர்களுக்கு அங்கு வந்திருந்த சிலர் உதவி செய்தனர். ஒரு இளம்பெண் திருமணம் முடிந்து தாலியுடன் தேர்வு எழுத வந்தார். முதலில் அந்த பெண்ணை தடுத்த அதிகாரிகள், பின்னர் உயர் அதிகாரிகளிடம் பேசி தாலியுடன் தேர்வு எழுத அனுமதித்தனர்.
நுழைவு சீட்டு
துப்பட்டா அணிந்து வந்த மாணவிகள் தேர்வு மைய அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பெட்டியில் அதை போட்டுவிட்டு உள்ளே சென்றனர். தலை முடியை சடையாக பின்னி செல்ல அனுமதிக்கப்படாததால், பின்னலை அகற்றினர். அத்துடன் தங்கள் கைகளில் கட்டி இருந்த கயிறுகளையும் அகற்றிவிட்டு உள்ளே சென்றனர்.
நுழைவு சீட்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அடையாள அட்டை, கிருமி நாசினி. வெள்ளை நிற பாட்டிலில் குடிதண்ணீர் ஆகிய 5 பொருட்கள் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பேனா எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட வில்லை. தேர்வு அறையில் அவர்களுக்கு பேனா வழங்கப்பட்டது.
3 மொழிகளில் வினா தாள்
தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. காலை 11 மணி முதல் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்ட தால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் மதிய உணவு இன்றி தேர்வு எழுதினர்.
மாணவ-மாணவிகள் தேர்வு எழுதும் முன் பெற்றோரிடம் ஆசி பெற்று சென்றனர். தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
மேட்டுப்பாளையத்தில் நடந்த ஒரு தேர்வு மையத்தில் 417 மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story