333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை


333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
x
தினத்தந்தி 14 Sep 2021 6:51 PM GMT (Updated: 14 Sep 2021 6:51 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லை

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வருகிற அக்டோபர் மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் மாதம் 12-ந் தேதி நடக்கிறது.

இதுகுறித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல் நாளை (அதாவது இன்று புதன்கிழமை) தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாள் வருகிற 22-ந் தேதியாகும். 23-ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு 25-ந் தேதி கடைசி நாளாகும்.

நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக அக்டோபர் மாதம் 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

2-வது கட்ட தேர்தல்

களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய 4 பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-வது கட்டமாக அக்டோபர் மாதம் 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் மாதம் 12-ந் தேதி நடக்கிறது. தேர்தல் நடைமுறைகள் அக்டோபர் மாதம் 16-ந் தேதி நிறைவு பெறுகிறது. பதவியேற்பு 20-ந் தேதி நடக்கிறது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், யூனியன் தலைவர், துணைத்தலைவர், கிராம பஞ்சாயத்து துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் அக்டோபர் மாதம் 22-ந் தேதி நடக்கிறது.

ஓட்டுப்பதிவு

ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகளுக்கும் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
12 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 122 யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி 204, கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி 1,731 ஆக மொத்தம் 2,069 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத்தலைவர், கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் என 224 இடங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

வாக்குச்சாவடிகள்

9 பஞ்சாயத்து யூனியன்களில் மொத்தம் 1,188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் 30 ஆண் வாக்குச்சாவடிகள், 30 பெண் வாக்குச்சாவடிகள் மற்றும் 1,128 அனைத்து வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

இங்கு ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 30 ஆயிரத்து 487, பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 43 ஆயிரத்து 325, மூன்றாம் பாலினத்தவர் 56 பேர் ஆக மொத்தம் 6 லட்சத்து 73 ஆயிரத்து 868 வாக்காளர்கள் உள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

நெல்லை மாவட்டத்தில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

மேலும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். இணையதள கண்காணிப்பு போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 9 பஞ்சாயத்து யூனியனில் மொத்தம் 20 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 277 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். முதல்கட்ட தேர்தலுக்கு 5,002 வாக்குப்பதிவு அலுவலர்கள், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு 4,511 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

5 பறக்கும் படைகள்

5 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் துணை தாசில்தார் நிலையில் ஒருவரும், 3 போலீஸ் அலுவலர்களும் மற்றும் வீடியோ பதிவாளர் என மொத்தம் 5 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணிக்க கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மாநகராட்சி, பேரூராட்சி, நகரசபை பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் கிடையாது. கிராம பஞ்சாயத்து பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பர பலகைகள் அகற்றம்

இதற்கிடையே நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

Next Story