மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார்.
பெரியபாளையம்,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஏடூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா (வயது 49). விவசாயி. இவரது மனைவி பாப்பாத்தி (45). திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள கம்மாளமடம் கிராமத்தில் வசித்து வந்த பாப்பாத்தியின் சித்தப்பா துரை நேற்று முன்தினம் அதிகாலை இறந்துவிட்டார். பாப்பாத்தி தனது மகன் அஜித் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பழவேற்காடு நோக்கி நேற்று மதியம் சென்றார்.
ஆரணி அருகே பெரியபாளையம்-புதுவாயல் நெடுஞ்சாலையில் கொள்ளுமேடு கிராமத்தில் சென்றபோது அஜித் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்த பாப்பாத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் தவறி விழுந்தார்.
இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பாப்பாத்தியை அங்கு இருந்தவர்கள் மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே பாப்பாத்தி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங் களில் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story