பெங்களூருவில் 20 நாட்களில் சாலை குழிகளை மூட வேண்டும் - அதிகாரிகளுக்கு மந்திரி ஆர்.அசோக் உத்தரவு


பெங்களூருவில் 20 நாட்களில் சாலை குழிகளை மூட வேண்டும் - அதிகாரிகளுக்கு மந்திரி ஆர்.அசோக் உத்தரவு
x
தினத்தந்தி 18 Sept 2021 2:59 AM IST (Updated: 18 Sept 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 20 நாட்களில் சாலை குழிகளை மூட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு:

3-வது டோஸ் தடுப்பூசி

  பெங்களூரு மாநகராட்சி சார்பில் கெத்தலஹள்ளி அங்கன்வாடி மையத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் தொடக்க விழாவில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கலந்து கொண்டு, தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  பெங்களூருவில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி போடுவது குறித்து இன்னும் முடிவாகவில்லை. ஒருவேளை நிபுணர்கள் பரிந்துரை செய்தால், 'பூஸ்டர் டோஸ்' அதாவது 3-வது டோஸ் தடுப்பூசி போடப்படும்.

குழிகளை மூட வேண்டும்

  பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி இந்த மெகா தடுப்பூசி முகாமை நடத்துகிறோம். பெங்களூருவில் மட்டும் 2,200 மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். பெங்களூருவில் இனி தினமும் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும்.

  கிராமங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சிலர் தயங்குகிறார்கள். அத்தகையவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். பெங்களூருவில் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை 20 நாட்களில் மூட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பான விஷயம் சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டால் மாநகராட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது.
  இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Next Story