வேப்பனப்பள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது


வேப்பனப்பள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2021 6:27 AM GMT (Updated: 21 Sep 2021 6:27 AM GMT)

வேப்பனப்பள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். 
விவசாயி வெட்டிக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சீலேப்பள்ளியை சேர்ந்தவர் சின்ன வெங்கடப்பன் (வயது 71) . விவசாயி. சம்பவத்தன்று இவர் விவசாய நிலத்திற்கு சென்ற போது காரில் வந்த மாம நபர்கள் வழிமறித்து ஓட, ஓட வெட்டிக்கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது சின்ன வெங்கடப்பனின் மருமகள் ஜமுனாவின் தம்பி கார்த்திக் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து விவசாயியை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக்கை (26) போலீசார் கைது செய்தனர்.
 போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் சின்ன வெங்கடப்பனுக்கு 3 ஏக்கர் நிலம் இருந்தது. அவரது மகன், மருமகள், பேரன்கள் இறந்து விட்டதால் அவரது சொத்தை கார்த்திக் அபகரிக்க முயன்றதும், இதற்கு சின்ன வெங்கடப்பன் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டாளிகளான சூளகிரி பகுதியை சேர்ந்த அப்பு, ரவி மற்றும் 15 வயது 2 சிறுவர்கள் ஆகியோருடன் சேர்ந்து சின்ன வெங்கடப்பனை கொலை செய்தாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலையில் நேற்று முன்தினம் 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான நிலையில் மற்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். 
3 பேர் கைது
இந்தநிலையில் தலைமறைவாக இருந்த அப்பு (22), ரவி(24) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  கைதான 2 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் கார்த்திக்கின் அக்கா, 2 மகன்கள் விபத்தில் இறந்த வழக்கிலும் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், போலீசார் அந்த வழக்கையும் மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.


Next Story