சிறுமிகளை கடத்திய 2 சிறுவர்கள் போக்சோவில் கைது


சிறுமிகளை கடத்திய 2 சிறுவர்கள் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 22 Sept 2021 8:15 PM IST (Updated: 22 Sept 2021 8:20 PM IST)
t-max-icont-min-icon

திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமிகளை கடத்திய 2 சிறுவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். அவர்களுக்கும், மற்றொரு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 17 வயதுடைய 2 சிறுமிகளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத போதும், அந்த 2 ஜோடிகளும் அடிக்கடி வெளியே சென்று பழகி வந்தனர். இது அவர்களது பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் தங்களது குழந்தைகளை கண்டித்தனர். 

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி பள்ளிகளுக்கு சென்ற அவர்கள் 4 பேரும், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகளின் பெற்றோர், ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து, அவர்களை தேடி வந்தனர்.

இதற்கிடையில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் பள்ளி சீருடையில் 4 மாணவ-மாணவிகள் சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற ஊட்டி போலீசார், அவர்களை மடக்கி பிடித்தனர். 

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த சிறுவர்கள் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமிகளை கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமிகள் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story