ஏலகிரி மலையில் ரூ.10 லட்சம் கேட்டு வீட்டை சூறையாடிய முதியவர்


ஏலகிரி மலையில் ரூ.10 லட்சம் கேட்டு வீட்டை சூறையாடிய முதியவர்
x
தினத்தந்தி 24 Sept 2021 11:55 PM IST (Updated: 24 Sept 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

ஏலகிரி மலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ரூ.10 லட்சம் கேட்டு, குடும்பத்தினரை வீட்டை விட்டு விரட்டி வீட்டை சூறையாடிய முதியவரை ஊர் பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஜோலார்பேட்டை

ஏலகிரி மலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ரூ.10 லட்சம் கேட்டு, குடும்பத்தினரை வீட்டை விட்டு விரட்டி வீட்டை சூறையாடிய முதியவரை ஊர் பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ரூ.10 லட்சம் கேட்டு வீடு சூறை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது60). இவர் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக கூறி அவரது குடும்பத்தினரிடம் கடந்த மாதம் ரூ.10 லட்சம் கொடுக்கும் படி கேட்டுள்ளார். ஆனால் குடும்பத்தினர் இவருக்கு பணம் கொடுக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சீனிவாசன், தனது மனைவி நாசி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினரை வீட்டைவிட்டு விரட்டினார். 

இதனை தட்டிக்கேட்ட குடும்பத்தினரை கத்தியை காட்டி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதால் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி பள்ளகனியூர் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை வீட்டிலிருந்த சீனிவாசன், வீட்டில் வைக்கப்பட்டிருந்த நெல், கேழ்வரகு, அரிசி, பருப்பு மூட்டைகளை நாசம் செய்து, வீட்டின் கதவு, ஜன்னல்கள் அனைத்தையும் உடைத்து சூறையாடி உள்ளார். இதுகுறித்து அருகிலிருந்த நபர்கள் சீனிவாசன் மனைவி நாசிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

போலீசில் ஒப்படைப்பு

இது குறித்து தகவலறிந்து வீட்டிற்கு சென்ற குடும்பத்தினரை, சீனிவாசன் கத்தி எடுத்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து குடும்பத்தினர் தலைமறைவாகினர். இதனால் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி சீனிவாசனை விரட்டி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர். 

பின்னர் இதுகுறித்து ஏலகிரி மலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்&இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தனிப்பிரிவு போலீஸ் ரமேஷ் ஆகியோர் சென்று சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கடந்த மூன்று மாதங்களாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் உதவியுடன் அப்பகுதி மக்கள் சீனிவாசனை சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் ஏலகிரி மலையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story