குரங்கிற்கு இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்த கிராம மக்கள்


குரங்கிற்கு இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 25 Sept 2021 2:33 AM IST (Updated: 25 Sept 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

தெருநாய்கள் கடித்து செத்த குரங்கிற்கு கிராம மக்கள் இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.

எட்டி உதைத்தாலும் பிள்ளை தான் என்பது போல் சேட்டைகள் செய்தாலும் குரங்குகள் மீதான மக்களின் அன்பும், பரிவும், பாசமும் குறையவில்லை என்பது கர்நாடகத்தில் நடந்த இந்த சம்பவம் ஒரு உதாரணம் என்றால் மிகையல்ல. 
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அந்த சம்பவம் தான் என்ன என வினவுகிறீர்களா...

நெருங்கி பழகிய குரங்கு

கலபுரகி மாவட்டம் ஜேவரகி தாலுகா அரலகுண்டகி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்கு ஒன்று தஞ்சம் புகுந்தது. அந்த குரங்கு வீடுகள், கடைகளில் புகுந்து தின்பண்டங்கள் தின்றும் வந்தது. இருப்பினும் அந்த குரங்கு நாளடைவில் அந்த கிராம மக்களின் மனதை வென்றுவிட்டது. ஆம் அனைவரிடமும் அன்புகாட்டத் தொடங்கியது. 

இதனால் அந்த குரங்கு, கிராம மக்களிடம் குடும்பத்தில் ஒருவர் போல் நெருங்கி பழகத்தொடங்கியது. இதன் காரணமாக அந்த குரங்கு அந்த கிராமத்தில் உள்ள வீடுகள், கடைகளுக்கு தான் நினைத்த நேரத்தில் சென்று வந்தது. 

தெருநாய்கள் கடித்து குதறியது

இந்த நிலையில் தெருநாய்கள் அந்த குரங்கை அடிக்கடி துரத்தி செல்வதும், அந்த குரங்கு மரம், மின்கம்பம், வீடுகள் மீது ஏறியும் உயிர் பிழைத்தும் வந்தது. ஆனால் நேற்று முன்தினம் அந்த குரங்கை, தெருநாய்கள் துரத்தி, துரத்தி சென்று கடித்து குதறியது. இதை பார்த்த கிராம மக்கள் தெருநாய்களை விரட்டியடித்து குரங்கை மீட்டனர். ஆனால் தெருநாய்கள் கடித்து குதறியதில் படுகாயமடைந்த குரங்கு சிறிதுநேரத்திலேயே உயிரைவிட்டது. 

இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து கண்ணீர்விட்டு அழுதனர். தங்களுடன் பல மாதங்களாக குடும்பத்தில் ஒருவர் போல் பழகி வந்ததால், அந்த குரங்கை ஆஞ்சநேயரின் மறுவுருவம் என கருதி அதற்கு இறுதிச்சடங்கு நடந்த முடிவு செய்தனர். 

இறுதிச்சடங்கு செய்து அடக்கம்

தங்களது குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் எப்படி இறுதிச்சடங்குகள் நடக்குமோ அப்படி செத்துப்போன குரங்கிற்கு இறுதிச்சடங்கு நடத்தினர். கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள காலி இடத்தில் சாமியானா பந்தல் போட்டு, ஒரு இருக்கையில் குரங்கின் உடலை வைத்து அதற்கு பூமாலை அணிவித்து, தலைப்பாகை அமரவைத்திருந்தனர். 

மேலும் உறவினர் இறந்துவிட்டது போல் நூற்றுக்கணக்கான மக்கள் குரங்கு உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் கீழ் பகுதியில் அமர்ந்து இருந்தனர். விடிய, விடிய குரங்குக்கு பல்வேறு பூஜைகள், சடங்குகள் நடத்தினர். இரவு முழுவதும் தூங்காமல் கிராம மக்கள் குரங்கின் உடல் அருகிலேயே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தனர். நேற்று காலை குரங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து குரங்கின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் குரங்கின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. குரங்கை தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து கிராம மக்கள் தங்களது குடும்பத்தினர் இறந்துவிட்டால் எப்படி இறுதிச்சடங்கு நடத்துவார்களோ அது போல் இறுதிச்சடங்கி நடத்தி அடக்கம் செய்த சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டது. 

Next Story