ஊட்டியில் குடிநீருக்கு அலையும் சுற்றுலா பயணிகள்

ஊட்டியில் குடிநீருக்கு அலையும் சுற்றுலா பயணிகள்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வனவிலங்குகளை காக்கவும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் கடைகளில் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை கடந்த 2 ஆண்டுகளாக அமலில் உள்ளது.
அதன்படி 5 லிட்டர் கொள்ளளவுக்கு கீழ் குடிநீர் பாட்டில்கள் விற்பனை தடுக்கப்பட்டதும், அம்மா குடிநீர் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டது. அதற்கு மாற்று ஏற்பாடாக சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகள், நெடுஞ்சாலை ஓரங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் பொருத்தப்பட்டது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, மத்திய பஸ் நிலையம் உள்பட மாவட்டம் முழுவதும் 70 இடங்களில் எந்திரங்கள் பொருத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதில் ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால் 200 மில்லி லிட்டர், 2 ரூபாய் போட்டால் 400 மில்லி லிட்டர், ரூ.5 செலுத்தினால் 1 லிட்டர் குடிநீர் பிடித்து கொள்ளலாம். மேலும் அங்கேயே தண்ணீர் குடிக்க டம்ளர் பொருத்தப்பட்டது.
முழு ஊரடங்குக்கு பின்னர் ஒரு மாதத்துக்கு மேல் சுற்றுலா தலங்கள் திறந்து செயல்பட்டு வருகிறது. இருப்பினும் சுற்றுலா தலங்கள் முன்பு உள்ள குடிநீர் ஏ.டி.எம்.கள் பல மாதங்களாக செயல்படாமல் கிடக்கிறது.
நாணயம் செலுத்தும் பகுதி இயங்காமல் இருப்பதுடன், சில இடங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் காணாமல் போய் உள்ளது. குறிப்பாக சங்கிலியுடன் பொருத்தப்பட்ட டம்ளர்கள் இல்லை. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் எந்திரங்களில் குடிநீர் கிடைக்காததால் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ஊட்டியில் உள்ள கடைகளில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை இல்லை. குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், அதில் குடிநீர் வருவது இல்லை. சுற்றுலா வந்த பின்னர் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை உள்ளது.
எனவே, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பொருத்திய எந்திரங்களை பராமரித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.. அவர்கள் பயன்பாட்டுக்கு வருமா என்பது எங்களது எதிர்பார்ப்பு என்றனர்.
Related Tags :
Next Story