சின்னமனூர் வனச்சரக அலுவலகம் முற்றுகை

சின்னமனூர் அருகே மலைமாடு உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து வனச்சரக அலுவலகத்தை மலைமாடுகள் உரிமையாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெமினி. இவரது மலைமாடுகளை, கருப்பையா என்பவர் நேற்று காலையில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மலைமாடுகளை மேய விட்டதாகக்கூறி கருப்பையாவை வனத்துறையினர் பிடித்து சின்னமனூர் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த ஜெமினி, சின்னமனூர் வனச்சரக அலுவலகத்திற்கு சென்றார். வனத்துறையினரிடம், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவரை வனத்துறை அதிகாரி ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையறிந்த மலைமாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர், ஜெமினியின் உறவினர்கள் திரண்டு வந்து வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், மலைமாடுகள் வளர்ப்பவரை தரக்குறைவாக பேசி, தாக்கிய வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறினர்.
சம்பவ இடத்துக்கு கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், வருகிற 10-ந்தேதி தேனி மாவட்டத்துக்கு வனத்துறை அமைச்சர் வருகிறார். அவரை சந்தித்து மலைமாடுகள் மேய்ச்சல் குறித்து பேசி முடிவெடுப்போம். நாளை (இன்று) சங்கத்தை சேர்ந்த 5 பேரை அழைத்து சென்று மாவட்ட வன அதிகாரியுடன் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்றார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story