வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 29 Sept 2021 12:08 AM IST (Updated: 29 Sept 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் நீலமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் தேர்தலின் போது எவ்வாறு வாக்குசீட்டு மூலம் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றிய மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். 
அப்போது அவர் கூறுகையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடர்பான பணிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீட்டு பணி நிறைவு பெற்றுள்ளன. சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது மின்னணுவாக்குப்பதிவு முறையில் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. தற்போது வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்கும் முறை மேற்கொள்ளப்பட உள்ளது. 

வாக்குசீட்டு

இது குறித்து  வாக்காளர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிறம், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்  பதவிக்கு பச்சை நிறம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குசீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது.
 எனவே தேர்தலின் போது  வாக்காளர்கள் கவனத்துடன் வாக்களிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து விழிப்புணர்பு துண்டு பிரசுரங்களை  பொதுமக்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். பின்னர் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதி மொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில்  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, கள்ளக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story