தூத்துக்குடி மாவட்டத்தில் 2021, 2022ம் ஆண்டில் ரூ.5420 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் ரூ.15 ஆயிரத்து 420 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் ரூ.15 ஆயிரத்து 420 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை கனிமொழி எம்.பி. வெளியிட்டார்.
வங்கியாளர்கள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் தூத்துக்குடி அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கான 2021-22-ம் ஆண்டின் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடன்
கொரோனா பெருந்தொற்று காரணமாக வங்கியாளர்கள் தங்களது இலக்கை அடைய முடியாத சூழ்நிலை அனைத்து இடங்களிலும் நிலவி வருகிறது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இலக்கை கடந்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2020-21-ம் ஆண்டில் கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.12 ஆயிரத்து 84 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரூ.14 ஆயிரத்து 561 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. இது இலக்கை தாண்டி 120.49 சதவீதமாகும்.
இலக்கு
இதைத் தொடர்ந்து 2021-22-ம் ஆண்டுக்கான இலக்காக ரூ.15 ஆயிரத்து 420 கோடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட 21.63 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டும் வங்கியாளர்கள் இலங்கை தாண்டி சாதனை படைக்க வேண்டும். இந்த திட்டம் மூலம் கிராமப்புறங்களை முன்னேற்ற உதவுகிறது. மக்கள் மற்றவர்களிடம் வேலை செய்வதை விட, தாங்கள் தொழில் தொடங்கி மற்றவர்களுக்கு வேலை தர வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.
அந்த எண்ணம் நிறைவேறுவதற்கு அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி புரியும். அனைவரும் முன்னேறும் வகையில் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து தர வங்கியாளர்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ரு தயஞ்ஜெய் நாராயணன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் சொர்ணலதா மற்றும் வங்கியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
--------
Related Tags :
Next Story