மணியகாரம்பாளையத்தில் பரபரப்பு : இரும்பு வியாபாரி வீட்டில் 101 பவுன் நகை கொள்ளை


மணியகாரம்பாளையத்தில் பரபரப்பு : இரும்பு வியாபாரி வீட்டில் 101 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 6 Oct 2021 1:18 PM IST (Updated: 6 Oct 2021 1:18 PM IST)
t-max-icont-min-icon

மணியகாரம்பாளையத்தில் இரும்பு வியாபாரி வீட்டில் 101 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அங்கு கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி சென்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கணபதி,

கோவையை அடுத்த கணபதி மணியகாரம்பாளையம் வேலவன் நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது44). இவருடைய மனைவி ஐஸ்வர்யா (34). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தினகரன், கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணறில் இரும்பு மொத்தம் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் கடந்த 3-ந் தேதி தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். நேற்று அதிகாலை 1 மணி அளவில் வீடு திரும்பினார். அவர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது தரைத்தளத்தில் படுக்கை அறையில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

மேலும் அங்கிருந்த இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த 10 பவுன் மாங்கா மாலை, 10 பவுன் ஆரம், 28 பவுன் வளையல், 16 பவுன் அன்னபச்சை மாலை, 20 பவுன் கம்மல் செட், 15 பவுன் பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் உள்பட 101 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அந்த லாக்கரில் வெள்ளை பையில் இருந்த 30 பவுன் நகைகள் தப்பின. இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் கந்தசாமி, செந்தில்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் குழுவினர் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்ததால் மோப்பநாய் வீட்டையே சுற்றிச்சுற்றி வந்தது. யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தினகரனின் வீட்டின் வெளியே ஒரே ஒரு கண்காணிப்பு கேமரா மட்டும் பொருத்தப்பட்டு இருந்தது. அதை கொள்ளையர்கள் வேறு திசையில் திருப்பி வைத்து விட்டு வீட்டிற்குள் புகுந்துள்ளனர். பின்னர் பக்கவாட்டில் இருந்த படி வழியாக மாடிக்கு ஏறி சென்றனர்.

இதையடுத்து அவர்கள் மாடியில் உள்ள கதவை உடைத்து வீட்டின் கீழ்தளத்தில் இறங்கி லாக்கரை உடைத்து கொள்ளை திட்டத்தை அரங் கேற்றியது தெரியவந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏதாவது பதிவுகள் உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 101 பவுன் நகை கொள்ளை போனது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த அருண் என்பவர் வீட்டில் 51பவுன் நகை கொள்ளை போனது. தற்போது இரும்பு வியாபாரி வீட்டில் 101 பவுன் நகை கொள்ளை போனது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Next Story