முந்திரி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ் கோர்ட்டில் சரண்


முந்திரி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 11 Oct 2021 7:40 PM GMT (Updated: 11 Oct 2021 7:40 PM GMT)

முந்திரி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பண்ருட்டி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது 55). தொழிலாளியான இவர், பணிக்கன்குப்பத்தில் உள்ள கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 19-ந்தேதி காலை வேலைக்கு சென்ற கோவிந்தராசு, அன்று இரவு நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் நள்ளிரவில் அந்த முந்திரி தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், கோவிந்தராசு மகன் செந்தில்வேலை செல்போனில் தொடர்பு கொண்டு, கோவிந்தராசு விஷம் குடித்து விட்டதாகவும், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

ரத்த காயங்கள்

உடனே அவர் தனது உறவினர்களுடன், பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த போது கோவிந்தராசு உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது. இதுபற்றி அறிந்த காடாம்புலியூர் போலீசார், கோவிந்தராசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தனது தந்தையை முந்திரி தொழிற்சாலையில் வைத்து அடித்து கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுவதாகவும், தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாகவும் காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் செந்தில்வேல் புகார் கொடுத்தார். அதன் பேரில் மர்ம மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இதற்கிடையில் கோவிந்தராசு இறந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது மகன் செந்தில்வேல் மற்றும் பா.ம.க.வினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக பா.ம.க.வினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 
இதற்கிடையே புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியை சேர்ந்த 7 பேர் கொண்ட டாக்டர் குழுவினர், கோவிந்தராசு உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பிறகே கோவிந்தராசு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

பிரேத பரிசோதனை அறிக்கை

இதனிடையே கோவிந்தராசு இறந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.  விசாரணையில் கோவிந்தராசுவை அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

5 பேர் கைது

இதையடுத்து கோவிந்தராசு மர்மசாவு வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். மேலும் கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன்(31), முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல்(49) மற்றும் தொழிலாளர்கள் அல்லாபிச்சை(53), சுந்தர் என்கிற சுந்தர் ராஜ்(31), வினோத்(31) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, கடந்த 9-ந் தேதி காலை நடராஜன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரமேஷ் எம்.பி.யை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

எம்.பி. சரண்

இந்த நிலையில் ரமேஷ் எம்.பி. நேற்று காலை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் சரண் அடைந்தார். அப்போது நீதிபதி கற்பகவல்லி பிறப்பித்த உத்தரவில், ரமேஷ் எம்.பி.யை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும், கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்யவும், 13-ந் தேதி (நாளை) கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தும்படியும் கூறியுள்ளார். 
இதையடுத்து ரமேஷ் எம்.பி.யை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரமேஷ் எம்.பி். கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் 
தி.மு.க. எம்.பி. ரமேஷ் கோர்ட்டில் சரண் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story